சாலை விதி மண்ணாங்கட்டிகள்

உள்ளே வரும்போதே பெயரை ஏலம் போட்டுக்கொண்டே வரும் மணி அண்ணா, அன்று கொஞ்சம் பரபரப்பாக போனில் பேசியபடியே வந்தார். போகிற போக்கில் போனை பார்த்தவாறே என்னிடம்,

" ஏம்பா உனக்கு துபாயில தெரிஞ்சவங்க யார்னா இருக்காங்களா?"  என்று கேட்டார்.

"இல்லையே ணா. நீங்க போனா உங்க பேர சொல்லிக்குவேன்"

"அட. ஏம்பா நீ வேற", உண்மையாகவே சலித்துக் கொண்டார். எப்போதுமே துடிப்பாக இருக்கும் அவர் சலித்துக் கொள்பவர் அல்ல.

என்னவென்று விசாரித்தேன். துபாயில் அவரது தூரத்து உறவினர் ஒருவருக்கு சாலை விபத்து நிகழ்ந்ததாகவும், ICU வில் இருக்கிறார் என்றும் கூறினார்.

"ராங் சைட்ல வேற போய் ஆக்சிடெண்ட் பண்ணி இருக்கான் பய."

" அங்கலாம் ராங் சைட்னா லைசன்ஸ எடுத்துருவானுங்களே ணா?"

"அதெல்லாம் எடுத்திருப்பானுங்க பா. அவன் பொழச்சு வந்தாலும் அவனுக்கு ஏதாச்சும் அபராதம் போட்டாலும் போடுவனுங்க", என்று சொல்லிவிட்டு பரபரப்பாக மீண்டும் தன் நண்பர்கள் உறவினர்களுக்கு போன் செய்யத் தொடங்கினார்.

சாலை விபத்து, சாலை விதி மீறல், ஓட்டுநர் உரிமம் என்றதும் இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.



  என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் பணி புரிந்தபோது அங்கே ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தவர். அவர் ஒரு நாள், காட்டு வழி நெடுஞ்சாலையில் பயணித்து இருக்கிறார். அப்போது மஸ்க் deer எனப்படுகிற மான் வகை விலங்கு ஒன்று வேகமாக சாலையைக் கடக்க முயற்சிக்க, காரில் லேசாக தட்டிவிட்டு, மறுப்பக்கம் சென்றுவிட்டது. நண்பர் கீழே இறங்கி, மானைத் தேடிப் பார்ப்பதற்குள், அவர் கண்களை விட்டு மறைந்திருந்து அந்த மான். மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்ட சற்று நேரத்தில் போலீஸ் அவரை நிறுத்தி விசாரித்தது. மான் மோதியதை காமிராவில் கண்ட போலீசார், அவரை மறித்து காட்டுக்குள் செல்லச் சொல்லி அங்கே அந்த மான் நலமுடன் இருக்கிறதா என்று கண்டு வரச்சொல்லி இருக்கார். நண்பருக்கு நாடும் புதுசு. அந்த காடும் மிகவும் அந்நியம். ஆனாலும் ஒரு நாள் முழுக்க காட்டில் அலையவிட்டு, பின்னர் விலங்கியல் நிபுணர்களை தருவித்து, மானைத் தேடி கண்டுபிடித்து, அதற்கு பெரிய அடி ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகே நண்பரை விட்டனர். மனிதர்கள் மேல் மட்டுமல்லாது பிற உயிர்கள் மேலும் அந்த நாடு கொண்ட அக்கறையைக் காட்டுகிறது இந்த சம்பவம்!

 நான் நினைவு கூரும் மற்றொரு நினைவோ உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான (ஜனநாயகம் என்றால் மக்களால் மக்களுக்காக மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு) நம் நாட்டில் எங்கள் ஊரில் நடந்தவொரு சம்பவம். எங்கள் ஊரில் ஸ்கூல் படிக்கிற, ஓட்டுநர் உரிமம் வாங்கத் தேவையான LLR கூட பெறும் வயது வராத பையன்கள், பெண்கள் எல்லோரும் டீவிஸ் எக்ஸல் முதல் சூப்பர் பைக்குகள் வரை ஒட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். பெற்றோர்களும் எதிர்க்காமல் வண்டி வாங்கித் தருவர். போலீசும் ஒரிருவரைப் பிடித்துப் பணம் பார்த்துவிட்டு, கண்டும் காணமல் விட்டுவிடுவர். பள்ளிகள் நடத்துவோரும் இதைக் கண்டிப்பதோ தடுப்பதோ இல்லை! அப்படி என்ன ஊர் என்று கேட்கிறீர்களா? கொங்குச் சீமைதான். பொள்ளாச்சில இருந்து ப்ரைவேட் பஸ்சுகலாம் போட்டிபோட்டு பயங்கரமா ஓட்டிகிட்டு போன வாட்சாப் வீடியோலாம் பாத்திருப்பீங்களே? அந்த சம்பவத்துக்கு அப்புறம் ரெண்டு நாள் அடங்கிட்டு ஒட்டுனானுங்க. அப்புறம் பழைய கததேன்.

இப்படியாக இருந்த ஊரில் சில மாதங்கள் முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று, எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. குடிபோதையில்(!!??) மூன்று பேராக இரு சக்கர வாகனத்தில் (!!??) சென்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்(!!??) ரோட்டோரத்தில் பேசிக் கொண்டு இருந்த பெண் ஒருவரை மிக வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் அந்தப் பெண். அவருக்கு திருமணமாகி அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது.

 வழக்கு தொடரப்பட்டது. உள்ளூர் பெரியவர்கள் சிலரது 'தயவால்' அந்த மூவரும் கொஞ்சமும் தண்டனை இல்லாமல், அவர்கள் மேல் ஒரு கேஸ் கூட போடாமல் விடுதலை பெற்றனர். இப்போது அவர்கள் அதேபோல் மது அருந்திக்கொண்டும், வண்டி ஒட்டிக்கொண்டும் இருக்கலாம்.

மேனாடுகளில் சாலையில் வண்டி ஓட்டுவது என்பது வெறுமனே ஒரு கருவியை செலுத்துவது என்று அல்ல. அது ஒரு நடைமுறை. மக்கள் அனைவரும் பங்கு கொள்ளும் ஒரு செயல். அங்கு பிரதி ஒருவருக்கு கடமைகளும், அவர்களுக்கேயான உரிமைகளும் உண்டு. அதனாலேயே ஓட்டுநர் உரிமம் பெற , எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் உண்டு. மேலும் சாலையில் மிகக் கறாரான விதிகள் கச்சிதமாகப் பின்பற்றவும் படுகின்றன. இங்கே, சிக்னலுக்கு அருகே போலீஸ் இல்லையென்றால் நிற்க மாட்டோம். நடைபாதையில் வண்டி ஓட்டுவோம். இண்டிகேடர் போடுவதெல்லாம் கிடையாது;சக்திவாய்ந்த ஹெட்லைட்டுகள் வைத்துக்கொண்டு எதிரில் வருபவரைக் குருடாக்குவோம்; ரோட்டோரத்தில் ப்ளெக்ஸ்,விளம்பரத் தட்டி என்று கவனச் சிதறல்கள் வேறு. நமக்கு சாலை விதியாவது மண்ணாங்கட்டியாவது; சமூகநீதியாவது புடலங்காயாவது, நாமெல்லாம் வேற லெவல் ஆயிற்றே.


விலங்குக்கு ஒன்று என்றாலே பேரேடு எடுக்கும் நாடு எங்கே, நடைபாதையில் மனிதர்கள் சிலரையே கார் ஏற்றிக் கொன்றவனை இன்னும் வைத்து வழக்காடிக் கொண்டிருக்கும் நாம் எங்கே! தவறான பாதையில் சென்றவன் விபத்துக்கு உள்ளாயினும் உரிமம் ரத்து செய்யும் நாடு எங்கே, ஒரு பெண்ணையே கொன்றவர்களை வழிகாட்டி வீட்டுக்கனுப்பும் நாம் எங்கே! அப்போது தான் புரிந்தது; புரிந்தது என்று இல்லை; உறைத்தது:
  "நாடு என்பது அரசும், விதிகளும் அல்ல. அதை இயற்றி அனுசரித்து வரும் மக்களாகிய நாம் தான் நாடு", என்று. 






Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை......உண்மையை உன் பாணியில் உரக்கச் சொல்லியிருக்கிறாய் 💪

    ReplyDelete

Post a Comment