மராட்டியப் பேரரசு! ஷனிவார் வாடா-பேஷ்வா பாஜிராவ் தன் அந்தரங்க அறைக்குள் நுழைகிறார். "குடி பாட்வா நாளில் தீபங்கள் ஏற்றுவார்கள் பொதுவாக, நீ அணைக்கிறாயே காஷிபாய்!" தன் மனைவியைப் பார்த்து அங்கலாய்க்க, காஷிபாயோ, " என்ன இது சொல்லாமல் கொள்ளாமல் வந்துள்ளீர்!" என்றாள் விளக்குகளை ஊதி அணைத்துக் கொண்டே!
பேஷ்வா:
"சாம்ராஜ்யத்தின் பேஷ்வாவுக்கா தன் தனியறையில் நுழைய அனுமதி வேண்டும்?"
காஷி:
"இத்தனை நாட்களாய் நீர் இங்கு வரவில்லை அல்லவா? வேறோரிடத்தில் தொலையும் பொருளைக் கூட கண்டுபிடிப்பது எளிது. ஆனால் தன் வீட்டு முற்றத்திலே தொலையும் சில பொருட்களை கண்டுபிடிக்க முடிவதில்லை அல்லவா!"
தன்னைத் தான் கூறுகிறாள் என்று அறிந்தும் கூட தொனி மாறாமல் பேஷ்வா:
"போருக்குச் செல்கிறேன். வீட்டின் பெரிய மருமகள் நீ, ஆரத்தி எடுத்து வழி அனுப்ப வா"
" ஸ்ருங்காரமாகத் தயராகிறீர்கள் போல", ஆயாசமாய் தன் புடைவை முந்தானையை கையில் சுற்றியவாறு
சுரத்தையின்றி, " ஏ தாசி, அந்த ஆரத்தி தாளியைத் தயார் செய்" என்றபடி பேஷ்வாவைப் பார்த்து, " வாருங்கள் வந்தமருங்கள் இங்கே", படுக்கையில் தன் கைகளை பலமாய் தட்டினாள் காஷி.
பேஷ்வா:
" நான் உன்னைத் தனியாகக் காணவேண்டும் என்று ஆசைப்படுவேன் என்று தெரியாதா காஷி!"
காஷி:
"தனியாக எப்படி பேஷ்வா? காலையில் இருந்து மாலை வரை இந்த ஷனிவார் வாடாவை பராமரித்து பார்த்து வரவேண்டும், இடையில் நம் மகனை ஆச்சார்யரிடம் அழைத்துச் செல்லவேண்டும்" இப்படி சம்மந்தமின்றி பேசிப் பெருமூச்சு எய்திப் பின் ஒருவாறு ஆவலுற்றவளாய், " நம் ஆச்சாரியார் ஒரு கதை சொன்னார், கேளேன் பேஷ்வா, வந்தமர்ந்து கேள்", என்றாள்.
பேஷ்வா அமர்ந்து கேட்கத் தயாரானான்.
"ருக்மிணி ஒரு நாள் ஏகாந்தமாய் இருந்த கண்ணனிடம் சொன்னாள்- என்னதான் மனைவி என்றிருந்தாலும் காதலி என்றால் தான் பிரியம் அதிகம் போலும் என்று. கண்ணன் கேட்டானாம்- ஏன் அப்படி சொல்கிறாய் ருக்மிணி? அதற்கு ருக்மிணி சொன்னாள்- கணவன் மனைவி உறவு எவ்வளவு ஆழமாய் இருப்பினும் மக்கள் கூறுவது எப்போதும் ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா..."
இடைமறித்த பேஷ்வா,
" நீ எனக்கு எவ்வளவு இஷ்டமோ அவ்வளவு மஸ்தானியும் எனக்கிஷ்டம் காஷி!"
காஷி:
" இதே தான் கண்ணனும் கூறினானாம்! வேடிக்கையாய் இருக்கிறதல்லவா?" அவள் கண்களில் லேசாய் கண்ணீர் துளிர்க்கத் தொடங்கியது.
பேஷ்வா:
" நான் உங்கள் இருவருக்குள் எப்போதும் பேதம் பார்த்ததில்லை"
காஷி:
" அவள் என்றும் எனக்கு சமானமாய் இருந்ததில்லை ஸ்ரீமந்த்.."
பேஷ்வா:
" பின்ன என்ன குறைகண்டாய் காஷி?"
காஷி:
" குறை காண நான் வேறொருத்தி இல்லை பேஷ்வா, உங்கள் மனைவி. என் உயிர் கேட்டிருந்தால் கூட புன்னகையுடன் தந்திருப்பேன். மாறாக என் மரியாதையைப் பிடுங்கி இருக்க வேண்டாம் பேஷ்வா!", குரல் உடைகிறது; கோபாக்கினியில் கண் சிவந்து கண்ணீர் ஜ்வாலை வெளிப்பட்டது.
ஸ்ரீமந்த்துக்கும் கண் கலங்கியது. சிறு மௌனம்... பின் ஒரு முடிவுக்கு வந்தவராய் கட்டளைக் குரலில் பேஷ்வா:
" என்னால் உனக்கான கஷ்டங்களுக்கு எனக்கு என்ன தண்டனை தர வேண்டுகிறாயோ கொடு!"
காஷி:
" தண்டனையா நானா? ஹா.. இன்றுமுதல் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறேன்"
பேஷ்வா: " என்ன?"
காஷி:
" இதற்கு பிறகு எப்பொழுதும் இந்த அறைக்கு நீங்கள் வரக்கூடாது ராவ்"
பேஷ்வா:
" தெரிந்து தான் செய்கிறாயா காஷி"
காஷி:
" இந்த பேஷ்வா குடும்பத்தில் மருமகளாக வந்ததே உங்கள் மகிழ்ச்சிக்குத் தானே ஸ்ரீமந்த்? அதைத் தான் நிறைவேற்றுகிறேன்", ஊதுகுழலை எடுத்து அந்தரத்தில் இருக்கும் ஒவ்வொரு விளக்காய் பார்த்து பார்த்து அணைத்தாள் காஷி.
இன்னும் மூன்று விளக்குகள் மீதம் இருக்கையில், குழலை வாங்கிய பேஷ்வா தன் பங்குக்கு அவற்றை அணைத்தார். பின் குழலை அவளிடம் தந்து மறுவார்த்தை பேசாமல் விடு விடுவென்று வெளியேறினார் பேஷ்வா. அது தான் அவர் ஷனிவார் வாடாவுக்கு வந்த கடைசி முறையும் கூட!
Comments
Post a Comment