மீண்டும் Athena

வாரக் கடைசி என்றாலே எங்கேயாவது பறவை நோக்குதலுக்குக் கிளம்பலாம் எனத் தோன்றும். ஆனால் கூட வர யாரும் இல்லாத காரணத்தால், தனியாக செல்ல அலுப்பாக செல்லாமல் விட்ட நாட்கள் அதிகம். இந்த சனிக்கிழமை என்ன வேலை இருந்தாலும் ஒரு மணி நேரமாவது , அருகில் இருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியிலாவது(CEG campus, Anna University) பறவைகள் பார்க்க வேண்டுமென்று கிளம்பினேன். இந்த முறை என்னிடம் கேமரா இல்லை. மாறாக பைனாகுலர் மட்டும் தான் இருந்தது. நானிருக்கும் ஸ்ரீநகர் காலனியில் இருந்து சுவரேறி குதித்தும் கிண்டி பொறியியல் வளாகத்துக்குச் செல்லலாம். ஆனாலும், என் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். காலை மணி 6:30.

 நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனக் கட்டடம் தாண்டி, பேரெடு கிரவுண்ட் இருக்கும் தாழம் விடுதி நுழைவாயில் வழியே உள்ளே சென்றேன். அங்கு நீலவால் பஞ்சுருட்டான்களை போன முறை வந்தபோது பார்த்தேன். இந்த முறை அவைகளின் ஒரு விட்ட உறவான பச்சைப் பஞ்சுருட்டான்களாவது இருக்குமா என்ற நப்பாசையில் மரங்களின் உச்சிக் கிளைகளை பார்வையில் அளைந்து கொண்டே மெதுவாக சைக்கிளை செலுத்தினேன். தாழம் விடுதி கண்ட எனக்கு அதிர்ச்சி! அங்கேயும் கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர். என்னதான் இன்னும் இந்த வளாகத்தில் கட்டிக் கொண்டே இருப்பார்களோ!

   முதலில் அங்கே கேட்ட குரல் வெண்புருவச் சின்னான் (WHITE BROWED BULBUL) உடையது. எங்கோ மறைந்து கொண்டே கத்திக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அதன் குரல் அடங்கி, இன்னும் ஆழமான செம்போத்தின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆஹா செம்போத்தைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆச்சே என்று நெருங்கிச் சென்று பார்த்தேன். COUCAL என்று ஆங்கிலத்தில் சொல்லும் செம்போத்து தனியாக அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. நான் பார்க்க வந்த பஞ்சுருட்டான் அங்கு இல்லை!

  அவ்விடத்தில் கடையை காலி செய்து மெதுவாக மெக்கானிக்கல் துறைக்கு பின்னுள்ள ரோட்டின் வழி சைக்கிளை செலுத்தினேன். அணில்களின் கீச்சலைத் தவிர வேறு சத்தம் ஏதும் இல்லை. காலை ஜாகிங் போவோர் கூட இன்னும் வர நேரமாகவில்லை. எப்போதும் ஒரு யாத்திரை போல இந்த வளாகத்தில் நான் செல்கிற துணைவேந்தர் அலுவலகம் முன்னுள்ள மரத்தடிக்குச் சென்றேன். அதற்கொரு காரணம் உண்டு.

 நான் இந்த வளாகத்துக்கு ஒரு முன்னாள் மாணவனாக வரும்போதெல்லாம், தவறாமல் சென்று பார்ப்பது என் வகுப்பறையையோ, என் விடு்தியையோ அல்ல;  துணைவேந்தர் அலுவலகம் முன்னே உள்ள நெடித்துயர்ந்த மரத்தின் பொந்தில் வாழும் ஒரு புள்ளி ஆந்தையை. CEGயில் படித்த நான்கு வருடங்களில், கடைசி ஒன்றரை வருடங்கள், பரந்து விரிந்த பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு இடங்களில் பறவைகள் நோக்கி, இன்னின்ன பறவைகள் எங்கு இருக்கும் என்று குறித்து வைத்துக் கொண்டது நான் செய்த சுவாரஸ்யமான செயலாகும். அதிலும் என்னை எந்த முறையும் ஏமாற்றாமல் எனக்கு எப்போதும் காட்சி தரும் இந்தப் புள்ளி ஆந்தைப் பார்ப்பது, கிட்டத்தட்ட எனக்கு சென்டிமெண்டாகவே மாறி இருந்தது. கண்மூடி இருப்பது, கொட்டாவி விடுவது, அங்குமிங்கும் முட்டைக கண்ணை வைத்து முழித்து முழித்துப் பார்ப்பது என இந்த ஆந்தையின் cute expressions பலவற்றை கண்ணால் கண்டும் கேமராவில் பதிவு செய்தும் மகிழ்த்துள்ளேன்! இதன் ஜோடி ஆந்தையும், அவைகளின் அடுத்த தலைமுறை ஆந்தையையும் கூட அந்தப் பொந்திலேயே வசித்து வந்தன.

என் இனிய Athena


இதற்கு நான் Athena, என்று பெயரும் இட்டிருந்தேன்(புள்ளி ஆந்தையின் அறிவியல் பெயர் Athena brama). என் ஜூனியர்களுக்கும் இந்த ஆந்தை குறித்துச் சொல்லி இருந்ததால், அவ்வப்போது அவர்கள் அவ்வழியில் செல்லும்போது Athenaவைப் பார்த்துவிட்டுச் செல்வர்.

தொலைந்து போன ஆந்தை 

  டிசம்பரில் அந்தக் குட்டி ஆந்தையைப் பார்த்த பிறகு, ஆந்தைக் குடும்பத்தைக் காண முடியவில்லை. அது வசிக்கும் மரத்தின் அடியில், மணல் போட்டும், தோண்டியும்  பல்வேறு மராமத்து வேலைகள் செய்து கொண்டிருந்ததால் வேறிடம் தேடி  போய் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் தொடர்ந்து ஐந்தாறு முறை சென்று பார்த்தும், பக்கத்து மரங்களில் தேடியும் எங்கும் காணவில்லை Athenaவை! மே மாதம் வரை கூட காணாததால், Athena குடும்பத்தைக் காலி செய்து விட்டதென்று எண்ணினேன். ஜூனியர்களும் அதைப் பின்னர் பார்க்கவில்லை. அதற்கேற்றாற்போல் பொந்திருக்கும் மரமும் கரையானால் பீடிக்கப்பட்டிருந்தால், இதன் காரணமாகக் கூட  Athena புலம் பெயர்ந்திருக்கும் என்று காரணம் கற்பித்துக் கொண்டேன். ஜூனியர் மாணவர்களும் கடந்த இரு மாதங்களாகவே அதைப் பார்க்கவில்லை என்றதால் ஆந்தைக் குடும்பம் வளாகத்திலேயே இல்லை என்று ஊர்ஜிதமானது.

  இந்த முறை சென்றபோது நான் அங்கே கண்ட ருசிகரக் காட்சிகள் இதோ:
  நம்பிக்கையே இல்லாமல் ஆந்தைப் பொந்தைக் கண்டேன். எண்ணற்ற முறைகள், தனியாக, நண்பர்களோடு, என்று வரும்போதும், கவலை மகிழ்ச்சி என்று எந்த மனவோட்டத்தில் இருந்தாலும் athena அங்கேயே கொட்டகொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருக்கும். சில முறை கொட்டாவி விட்டோ, கண்கள் மூடித் திறந்தோ வித்தை காட்டும். இப்போது அந்த பொந்து நான் எதிர்பார்த்ததைப் போலவே காலி தான்! சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டுப் போவோம் என்று எண்ணினேன். திடீரென்று அங்கே தாழப் பறந்த காக்கை ஒன்று பக்கத்து மரத்தில் அமர்ந்திருந்த ஏதோ ஒரு பறவையை விரட்டியது. உஷாராகி பைனாகுலரை தயார் நிலையில் வைத்தேன். விடிந்தும் விடியாத சூரிய உதயத்தின் எதிர் வெயிலானது, கண்கள் கூசச் செய்தது. நான் கண்டது ஒரு வேளை Athenaவாக இருக்குமோ என்று தீர்மானிப்பதற்குள், காக்கை அந்தப் பறவையை எதிரில் இருந்த அரச மரத்துக்கு விரட்டியது. பைனாகுலரில் பார்த்ததில் அது Athena அல்ல, ஒரு பெண் ஷிகரா பறவை என்று தெரிந்தது. எங்கள் கல்லூரியில் ஷிக்ராவைப் பார்ப்பது இதுதான் முதல்முறை! வைரி என்றும் வல்லூறு என்றும் தமிழில் அழைக்கப்படும் ஷிக்ரா ஒரு தேர்ந்த வேட்டைக்காரப் பறவை. ஆளில்லாத கூட்டில் வேட்டையாட வந்த ஷிக்ராவை காக்கை விரட்டி இருக்கும் போல. அரசமரக் கிளையில் அமர்ந்த ஷிக்ரா இங்குமங்கும் தலையைத் திருப்பி எதையோ தேடுவது போலிருந்தது. இதற்குள் ஆந்தை இருக்கும் மரத்தில் சலசலப்பு. பார்த்தால் athena! கொஞ்ச நேரம் நம்ப இயலவில்லை என்னால். 

"அங்கேயே ஆந்தையைப் பார்த்துப் பழகியதால்அங்கு இருப்பதாகத் தெரிகிறதா இல்லை , அங்கு உண்மையிலேயே இருக்கிறதா?" கண்கள் கசக்கி பைனாகுலரில் கண்டேன். அது athenaவே தான். கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்துப் பார்க்கிறேன்!இகல்வெல்லும் காக்கை இப்போது ஆந்தையை விரட்ட, அது இன்னும் உள்ளே போனது. சைக்கிளை நிறுத்திவிட்டு சாவகாசமாக ஆந்தையைப் பின்தொடர்ந்தேன். 

சுயம்வரம் 

இதற்கிடையில் அரச மரத்தில் நடந்த சம்பவங்கள் இன்னும் ருசியானவை. ஷிக்ரா வந்து அதகளபடுத்திய அந்த மரத்தில் சற்று நேரத்தில் இரு குயில்கள் விட்டு விட்டு கூவ ஆரம்பித்தன. ஒரு குயிலின் கூவல் முடிந்த கணம் மற்றது ஒரு ஸ்தாயி மேலே கூவத் தொடங்கும். இப்படியே மேலும் கீழும் போய்வந்து கொண்டே இருக்க, இன்னொரு விரும்பத்தகாத ஒரு ஓசை வந்தது. எந்த பறவை என்று தெரியாததால், ஓசை வந்த திக்கில் போகஸ் செய்தேன். அது ஒரு பெண்குயில். இப்போது புரிந்தது கதை! அங்கு நடந்தது அந்த பெண் குயிலுக்கான சுயம்வரம்! குயில்களில் பேடையானது தான் துணையை அதன் குரல் வளம் வைத்தே கண்டறியும். நடந்த அத்தனை சச்சரவிலும், இவைகள் இணை தேடுகின்றனவே! தில்லான பறவைதான் இந்தக் குயில்கள்.

 ஆந்தையைப் பின்தொடர்ந்த எனக்கு தொடர்ந்து கீச்சல்களை எழுப்பிய மைனாக்கள், வால்காக்கைகளின் செய்கை வித்தியாசமாகப்பட்டது. ஒரு கட்டத்தில் வரிசையாகப் பத்து இருபது மைனாக்கள் ஒரு பெரிய மரத்தில் இருந்து மேலெழுந்து மீண்டும் கீழே வந்ததில்தான் எனக்கு உறைத்தது, இது ஷிக்ரா அக்காவின் வேலை என்று. போகிற இடத்தில் எல்லாம் வம்பு செய்து வந்த ஷிக்ராவின் லீலைகளைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இதற்குள் அங்கே நான் கவனித்தவற்றில் இயல்பாக இல்லாதவை இவை: கிட்டத்தட்ட பத்து இருபது கரும்பருந்துகள் வானில் வட்டமடித்து அவ்விடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தன; மரங்கள் அடர்ந்த இடங்களில் எல்லாம் எக்கச்சக்க தட்டான்பூச்சிகள்!

  ஒவ்வொரு முறை பறவை நோக்கச் செல்லும்போதும் ஒரு புதிய அனுபவம் இருக்கும். என் Athena மீண்டு வந்த இந்த முறையும் அப்படித்தான். கடைசியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு அந்த பொந்தைப் பார்த்தேன். அரைக்கண் மூடிய நிலையில் Athena! கேமரா தான் இல்லையென மனக்கண்ணிலேயே காட்சியைப் படம்பிடித்துக் கொண்டேன்! மீண்டும் கிண்டி கல்லூரியில் புள்ளி ஆந்தை வாசம்!

 மேலும் சில படங்கள்:


அரைத்தூக்கத்தில்
சொறிந்துகொண்டு



பொந்துக்குள் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு

மீண்டும் Athena

 

Comments

  1. அட....
    மிகவும் அருமை அமர்..
    இயல்பான எழுத்தும்
    உன் எண்ணங்களும்...
    அருமைடா மகனே!!!

    ReplyDelete
  2. உன் மனோரதம் நிறைவேறிவிட்டது.....நீயே நினைத்தாலும் சில உறவேகள் உன்னை விட்டு அகலாது......அதில் Athenaவும் ஒன்று😍

    ReplyDelete

Post a Comment