05மார்ச்2018
வீட்டில் சீக்கிரம் துயில் எழுவேன் என்று சவால் விட்டு , அதிகாலை எழுந்து, வண்டி எடுத்துக் கொண்டு ஏரிக்குச் செல்லும்போது மணி ஆறரை! இருள் விலகாத காலைப்பொழுது. மெல்லிசாய் கொஞ்சம் வெளுப்பு கிழக்கே எட்டிப் பார்க்கும் நேரம். ஏரியை ஒட்டி வாளவாடி செல்லும் சாலையில் ஆள் அரவம் இல்லை. மூணாறு- திருமூர்த்திமலை செல்லும் பிரதான சாலையிலும் பெரிதாய் போக்குவரத்து இல்லை. அமைதியான இந்தத் தருணத்தில் அங்கு கேட்டதெல்லாம் இனிய பறவைகள் சத்தம் தான்!
பெரியகுளம் ஏரி
தமிழகத்தின் மேற்கெல்லையில், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, நான் பிறந்த ஊர். மேற்குத்தொடர்ச்சி மலைகள் அரணாகக் கொண்ட காற்று நகரம். காற்றாலைகள், தென்னந்தோப்புகள், மூன்று பக்கமும் நெடிய முடிவுகாணா மலைத்தொடர்கள், சில்லென்ற காற்று- இவை தான் எங்கள் ஊரின் அடையாளம். அமராவதி,ஆழியாறு, திருமூர்த்தி நீர்தேக்கங்கள் ஊர் அண்மையில் இருக்கும் நீராதாரங்கள். சிறிதும் பெரிதுமாக ஊரைச் சுற்றி சில ஏரிகள் உண்டு. அவைகளில் ஊர் மத்தியில் இருந்த குட்டையை மேடாக்கி குட்டைத் திடல் என்று வழங்கி ஊர் திருவிழா நடத்துகிறோம். இன்னுமொரு சின்ன குளம் பேருந்து நிலையமாக மாறி இருக்குமென்பது என் ஐயம். ரியல் எஸ்டேட் நுழைந்து மேடாக்கி கோடு கிழிக்கப்படாத சில ஏரிகளில் பெரியகுளமும் ஒன்று. மூணாறு செல்லும் வழியில் நான் படித்த பள்ளிக்கு அருகே இருக்கிறதே ஒரு சிறு ஏரி- அதுதான் பெரியகுளம்.
கால்பதித்தால் கரும் களிமண் பதியும் நீர்நிலை. ஏரி நடுவே சிறு முள் மரங்கள்,குடை போன்று காட்சியளிக்கும் முட்புதர் காட்டின் பிரதிநிதியான சில மரங்கள் வளர்ந்திருக்கும். குளத்தின் ஒரு கரையில் வாளவாடி என்னும் கிராமத்துக்கு செல்லும் பாதை. பாதைக்கு அப்புறமும் வயலும், தோப்புக்களும். அப்பா இந்த ரோட்டில் தான் காலை நடைபயிற்சி செய்வார்.
சிலசமயம் என்னையும் தங்கையையும் கூட நடைக்கு அழைத்துச் செல்வார். அவ்வப்போது அந்த ஏரியின் கரையில் ஏறி தண்ணீரை ரசிப்போம். காலை எழுவதுதான் கடினமாயிற்றே! விருப்பமே இல்லாமல் காலை 6 மணிக்கு எழுந்து செல்வோம். சுவாரசியம் இல்லாத காலைகளாக மாறும் அவைகள்.
அத்தகைய மொக்கையான காலைகளில் ஒன்றில், நான் கண்ட காட்சி என்றென்றைக்குமாய் என்னில் ஒரு மாற்றத்தை விதைத்தது. அன்று எப்போதும் போல் நாங்கள் கரை ஏறிப்பார்க்கும் போது ஏரியில் ஒரு வண்ணப் பறவை நீர் அளைந்து கொண்டு இருந்தது. நாங்கள் எப்போதும் பார்க்கும் கொக்குகள் அல்ல அது. சிவப்பு மஞ்சளாகக் காலும், வெள்ளையும் கருப்பும் கொஞ்சம் ரோஸ் நிற றெக்கைகளும், கொக்குகளை விட பருத்த உடலும், காலின் நிறம் போலவே அலகின் நிறமும் இருந்தது. அதே பறவையை பின்னர் தென்னமர ஓலையிலும் கண்டோம். என் மனதில் ஆச்சர்யம் குடிக்கொண்டுவிட்டது. இதற்கும் ஒரு பேர் இருக்கும் அல்லவா? கொக்குகளும் இவையும் வேறுவேறு தானே? இதன் பேரை எப்படி கண்டுபிடிப்பது? கூகுள் செய்தேன். பின்னர் தெரிந்து கொண்டேன் அது மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork) பறவை என்று. மேலும் மேலும் பறவைகளையும் அவைகளின் வகைகளையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. அப்பா walking போகலாம் என்று கூறி எழுப்புவது, bird watching போகலாம் வாங்க என மாறியது! இந்த முறை, உற்சாகமாக எழுந்து அப்பாவுடன் சென்று பறவைகள் நோக்கக் கற்றுக்கொண்டேன்!
பறவைகளின் சொர்க்கம்
பழைய ஞாபகங்கள் இனி நிற்க. நிகழுக்கு வருவோம். விடிந்ததும் விடியாதுமாய் எரிக்குச் சென்றது என் துர்பாக்கியமே. கௌதாரிகளின் கூச்சல், சிறு பாடும் வகைப் பறவைகளின்(Warbler) 'டிக் டிக்' எனும் சத்தங்கள் கேட்டன. ஆனால் அவைகளைக் காண பகலவனின் துணை வேண்டுமே. அமைதி காத்தேன். மெல்ல அங்குமிங்கும் கண்களால் துழாவி, அந்த இருட்டுக்குப் பழகினேன்.
| பழுப்புக் கீச்சான் |
முதலில் பார்த்த பறவையே நான் இது வரை பார்த்திராத பழுப்புக் கீச்சான் (brown shrike). திருடர்கள் கண்களில் சுற்றிக் கட்டும் கருப்புத் துணி போல அதன் கண்கள் சுற்றியும் கருநிறப் பட்டையை காணலாம். கரை ஓரம் வாழும் தாழக் கோழிகள், உள்ளான் எனப்படும் இனிய கீச்சல் எழுப்பும் பறவைகள், மஞ்சள் வாலாட்டிப் பறவைகள், நெட்டைக்காலிகள், போன்றன அந்தக் காலையிலேயே சத்தம் எழுப்பிய வண்ணம் நடை போட்டுக்கொண்டு இருந்தன.
எப்போதும் நான் போகும் வழிவிட்டு ஏரிக்கு உள்ளே செல்லும் ஒற்றை அடிப்பாதையை தேர்ந்தெடுத்தேன். அது மேய்ப்பர்கள் தம் மாடுகளை ஓட்டிச் செல்லும் பாதை. களிமண் தரை , ஏரி ஓரம்
எப்போதும் நான் போகும் வழிவிட்டு ஏரிக்கு உள்ளே செல்லும் ஒற்றை அடிப்பாதையை தேர்ந்தெடுத்தேன். அது மேய்ப்பர்கள் தம் மாடுகளை ஓட்டிச் செல்லும் பாதை. களிமண் தரை , ஏரி ஓரம்
புல்வெளி , நீர் தொட்டு வீசும் குளிர் காற்று, இவைகள் கண்டிப்பாக மாடுகளுக்கு பிடித்திருக்க வேண்டும். நீர் இருந்து வற்றினாலும் அங்கங்கு தேங்கின குட்டைகளில் பாசிகளும், அல்லிகளும் முளைத்திருக்கின்றன. அவைகளில் ஈக்கள், வண்டுகள் நிறைந்திருக்கின்றன. பாதையில் செல்லச்செல்ல என் முன்னே நெட்டைக்காலிகளும், மஞ்சள் வாலாட்டிப் பறவையும் தத்தி தத்திச் சென்று, என் கண் முன்னே பரிணாம வளர்ச்சியைக் காட்டின.(Pipit என்னும் நெட்டைக்காலிகளும் Wagtail என்னும் வாலாட்டிக் குருவிகளும் நெருங்கிய மரபணுக்களைக் கொண்ட பறவைகள்) நீண்ட நேரம் அவைகளின் அழகை ரசித்த பின்னர், கொஞ்சம் முன்னேறி, மாடுகள் மேயத் தகுந்த புல்வெளிகளை அடைந்தேன். நான் சென்ற பாதையில் இருமருங்கிலும் புளி, வேப்பம் போன்ற மரங்கள், எருக்கம் புதர்கள், நாட்டுக் கருவேலம், ஆகியன செழித்து வளர்ந்திருந்தன. ஒவ்வொரு புதர்களிலும், மரங்களிலும் இருந்து பலவிதமான பட்சிகள் சப்தமிட்ட வண்ணம் இருந்தன. தெற்கே இருந்து சின்ன சின்ன கூட்டங்களாக சோளக் குருவிகள் வந்து ஏரிக்கரையில் இருக்கும் ஒரு இலையற்ற மரத்தில் தங்குகின்றன. பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்டமாக ,ஏரி நீர்மட்டத்தின் மீது மிகத் தாழ்வாக பறந்து, ஒரு வட்டமடித்து, வானில் சிறு சாகச நிகழ்ச்சி நடத்திக் காட்டிவிட்டு வடக்கே பறந்து சென்றன. கிட்டத்தட்ட 100 - 200 சோளக்குருவிகள் வானில் ஓருருவமாய் ஒன்றிணைந்து கொண்டு பறப்பது மிக அழகான காட்சி!
பஞ்சுருட்டான்
| நீல வால் பஞ்சுருட்டான் |
| கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் |
வீட்டுக்கு வந்து எத்தனை பறவைகள் பார்த்திருக்கிறோம் என்று கணக்கிட்டதில் 40ஐத் தாண்டியது. எங்கள் ஊர் பெரியகுளம் என்னும் பள்ளியில் பறவைகள் தான் என் பாடங்கள்!
பெரியகுளம் ஏரியில் உள்ள பறவைகள் குறித்த பட்டியல் கொண்ட e-bird வலைதள இணைப்பு இதோ:
Ebird links-https://ebird.org/view/checklist/S43328184
https://ebird.org/view/checklist/S43737343
பி.கு: சென்ற வாரம் சென்றதில் இன்னும் ஏராளமான பஞ்சுருட்டான் பறவைகளும், உப்புக் கொத்திப் பறவையும், பாம்புத்தாரா பறவையையும்,முக்குளிப்பான், வாத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களைக் கண்ணுற்றேன்! உயிர்ப்பும் உயிர்ச் சூழலும் சார்ந்து விளங்குகிறது எங்கள் ஊர் ஏரி!
| ஏரியை ஒட்டி வளர்ந்திருக்கும் காடு |
பெரியகுளம் ஏரியில் உள்ள பறவைகள் குறித்த பட்டியல் கொண்ட e-bird வலைதள இணைப்பு இதோ:
Ebird links-https://ebird.org/view/checklist/S43328184
https://ebird.org/view/checklist/S43737343
பி.கு: சென்ற வாரம் சென்றதில் இன்னும் ஏராளமான பஞ்சுருட்டான் பறவைகளும், உப்புக் கொத்திப் பறவையும், பாம்புத்தாரா பறவையையும்,முக்குளிப்பான், வாத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களைக் கண்ணுற்றேன்! உயிர்ப்பும் உயிர்ச் சூழலும் சார்ந்து விளங்குகிறது எங்கள் ஊர் ஏரி!
அழகியதோர் அனுபவம்.. பறவைகளின் அழகு உலகம்❤️.. ஊர் ஏரி இன்னும் மாசில்லாமல் உள்ளதா??
ReplyDeleteகட்டுரையாளரின் அம்மா நான்...மாசில்லை
Deleteஆனால் குடிநீருக்காது...
அருமை பாரதி...
ReplyDeleteவாவ்.. மிக அருமையான எழுத்து நடை. வாசிப்பவர்களின் கண்முன்னே காட்சி விரிகிறது. தனித்திறமை பாரதி. எப்படி பறவையின் பெயர்களை தெரிந்து கொண்டாய் பாரதி
ReplyDeleteகூகுள் தான் முதலில். இப்போது என் பறவைகள் குறித்த ஐயங்களுக்கு விளக்கம் தரும் நட்புக் குழாம் இருக்கிறது!
DeleteThanks amar for taking me home and showing the bird life around, virtually. Would have loved to comment in tamil but am not adept at using the transliterater. I thoroughly enjoyed the blog. Keep writing. God bless.
ReplyDeleteYou must come to our place once sir. You will definitely love our surrounding!
DeleteI became big fan for your articles keep writing.
ReplyDeleteThank you athai. 😃
DeleteInteresting na. Should visit ur place one day na!
ReplyDeleteKandippa va sathya!
Deletei never read this before...impressive...
ReplyDelete