தேவனா, அசுரனா நீ?

ஒரு கேள்வி மனதில் அமைந்திருக்கும் பல்வேறு பிம்பங்களை தகர்க்க வல்லது. ஒரே ஒரு கேள்வி! எனக்கு மட்டுமல்ல இது நம் எல்லாருக்குமே ஏதோவொரு காலகட்டத்தில் நடக்கிற ஒன்று தான். இதனாலேயே "ஏன்?" என்ற கேள்வி மகத்துவமானது என்கிறேன்!



   ஆக்கபூர்வமாகவோ, அரட்டைக்காகவோ, எங்கள் கல்லூரி மாதவத்தில்அவ்வப்போது எழும் விவாதங்கள் ஒன்றில் மிக சமீபமாக கேட்ட ஒரு கருத்து அது. கலங்கிய குட்டையில் எறிந்த கல்லாக எக்கச்சக்க எண்ண அலைகளை எழுப்பியது அந்த கருத்து. UPSC எனப்படும் குடியுரிமை பணித் தேர்வில் வென்ற ஒருவரது பேச்சு கல்லூரியில் நடக்கவிருந்தது. அது குறித்த ஒரு பதிவை வாட்ஸாப்பில்  பகிர்ந்திருந்தனர். உடனே இப்படி ஒரு பதிவு வருகிறது:
"
நாட்டை‌க் கூறு போட்டு மேலை நாடுகளுக்கு விற்க வேண்டும் என்னும் WTO ஒப்பந்தத்தை நம் நாட்டில் கறாராக அமல்படுத்துவதே இந்த IASன் வேலை.

இது ஒரு பொழப்பா?

இந்த மாமா வேலையை எப்படி வாங்குவது என்று பாடம் வேற நடத்துறானுங்க.
"
  Hate speech எனப்படும் மிகையான, வெறுப்பும் , நம்பிக்கையின்மையும் உமிழும் பதிவுகளால் நிரம்பியது தான் சமூக வலைதளங்கள்பிறகு அதிகம் இளைஞர்களால் ஒரு அடுத்தகட்ட வாழ்க்கை பாதையாக இருப்பது இந்த UPSC. நாலு வருஷ பொறியியல் படிப்போ, மூன்று வருஷ கலை அறிவியல் பட்டப்படிப்போ, படித்தவுடன் இங்கு நிறைய பேருக்கு கிடைக்கும் அடுத்த பட்டம்- "UPSC Aspirant" என்பது. பேப்பர் படிப்பவனோ, அரசியல், வரலாறு தெரிந்தவனோ, தன் கீழ் வீட்டாரிடம் பேசாமல் இருக்குற இடம் தெரியாம இருப்பவனோ, யாராக இருந்தாலும் UPSC ஆசை வந்துவிட்டால்,  தலையணை தினுசில் இருக்கும் புத்தகங்கள் வாங்கி, வரலாறு பொருளாதாரம் என்று படித்துத் தள்ளுவதைப் பார்க்கும்போது எனக்கு எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். ஏன்யா வேடிக்கையா இருக்குன்னு சொல்ற என்று கோபமாய் கேட்பவர்கள் கீழ்காணும் என் கேள்விகளை சற்றே உற்று நோக்குங்களேன்!

‌-நிர்வாகம் புரியக் கூடியத் திறமை தேர்வெழுதி பாஸாவதால் வந்துவிடுமா?
‌அது தான் பயிற்சி தருகிறார்களே, அதில் நிர்வாகம் கற்றுத் தெளிவார்கள் என்றால், அங்கேயும் எனக்கு ஒரு சந்தேகம் சாமி! எப்படியோ தட்டி முட்டி படித்துப் பாஸாகி அங்கே இங்கே தெரிந்தவர்களிடம் காக்காய் பிடித்து, கையூட்டு கொடுத்து ஆட்சியர் அளவுக்கு வந்த ஒருவன், மீண்டும் விட்ட பணத்தை எடுக்கத் தானே பார்ப்பான்? (இந்தத் துறையில் லஞ்ச லாவண்யம் எல்லாம் இல்லையென்றால் சத்தியமாய் நம்பமாட்டேன். கடவுளை விடவும் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம், தூணிலும் துரும்பிலும் பரவி இருக்கும் ஒன்று லஞ்சம் என்பது என் கருத்து)

‌-மக்களுக்கு நல்லது செய்யணும், நம்ம நாட்டை வேற லெவலுக்கு உயர்த்தணும்னு ஆசைப்பட்டு படித்து தேர்வாகி ஆட்சியாளர்கள் ஆகும் பலர், சைரன் வைத்த வண்டியில் சென்று வந்துகொண்டு, சலுகை விலையில் மளிகை சாமான் வாங்கிக்கொண்டும், லஞ்சம் வாங்கி சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் ரெண்டு மூன்று அடுக்குமாடி வீடுகள் வாங்கிக்கொண்டும், சாதுர்யமான பேர்வழியானால், இந்திய மகாசமுத்திரத்தில் ஒரு சொந்தத் தீவும் என செட்டில் ஆகிவிடுகின்றனரே!ஏன்? எங்கே தவறு நிகழ்கிறது?

‌-அப்படியே லஞ்சம் தராமல், முழு முயற்சியில் ஆட்சியர்கள் வந்திருந்தால், இந்த 2018-1947 = 71 வருடங்களில், எவ்வளவோ அற்புதமான மாற்றங்கள் வந்திருக்கணுமே...ஆனால் எதுவும் வரலையே !!??


   இப்போது மீண்டும் நம்  கவனத்தை வாட்ஸாப் போராளியின் மேலும் கொஞ்சம் திருப்புவோம். அவர் தன்னை பெரியார்வாதி என்று கூறிக் கொள்பவர். கொஞ்சம் கம்யூனிஸ்ட் புத்தகங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களையும் பார்த்து வருபவர் என்று நம்புகிறேன். இது போன்றவர்களையும் நிறைய சமூக வலைத்தளங்களில் காணலாம். தன் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையோ, கருத்துக்களையோ கண் திறந்து பார்க்கவும் திராணியற்று, ஏற்றுக்கொள்ளத் தயங்கி, போரில் இறங்குபவர். எது எப்படியோ, இவரது வாதம் என்னை யோசிக்க செய்துவிட்டது.
 பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னைக்கு, அல்லது கொஞ்சம் வசதியானவர்கள் என்றால் டெல்லிக்கு சென்று UPSC கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேலான மக்களுக்கு, சர்க்கார் உத்தியோகம் வேண்டுமென்பதற்காகவே தேர்வெழுத எண்ணுகின்றனர். வங்கித் தேர்வுகள், நீட், ME க்கான GATE, MBA படிப்புக்கான CAT, இதனோடு என்னால் UPSC தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் இந்த தேர்வெழுதி வருபவர்கள் தான் வருங்கால இந்தியாவின் போக்கையே கணிக்கக்கூடிய, நிர்வகிக்கக்கூடிய பதவியில் இருக்கப் போகிறவர்கள். அரசியல்வாதி கூட 5 வருடத்துக்கு ஒருமுறை மாறுவான், ஆனால் IASஉம், IPSஉம், பணி ஓய்வு பெறும்வரை பதவியில் இருக்கிறான். அதற்குத்தான் அவர்களுக்கு அத்தனை கடினமான தேர்வுகள். இதற்காக நான் அதிகாரி வர்க்கத்தையே குற்றம் சொல்லவில்லை. சகாயம், சத்யேந்திர துபே, ஆம்ஸ்ட்ராங் பாமே, S R சங்கரன், ரூபா முத்கல் என தன்னிகரற்ற அதிகாரிகளும் இங்குள்ளனர். அவர்களும் இத்தகைய தேர்வுகள் கடந்து வந்தவர்கள் தான். ஆனாலும் சமகாலத்தில் உள்ள புற்றீசல் போன்ற கோச்சிங் சென்டர்கள், லட்சக்கணக்கான UPSC கனவுகளோடு உள்ள மக்களைப் பார்க்கும்போது, இந்த நேர்மையும் உண்மையும் நாளடைவில் நீர்த்துப் போகுமோ என்ற பயம் வருகிறது.

  இது குறித்து நானும் ஹரியும் பேசிக் கொண்டிருந்தோம். அவன் இந்த விஷயத்தில் என் கருத்தென்னவென்று கேட்டான். நான் சொன்னது இதைத் தான். அசுரர்களும் உடல் உருக்கி, கண்ணீர் மல்க இறை பக்தி கொண்டு தான் கடுந்தவம் புரிகின்றனர். ஆனால் வரம் வாங்கிய அடுத்த கணம், வரம் தந்த ஈசன் தலைக்கே குறி வைக்கின்றனர்! அதே நேரம்,வரம் வாங்கிய பின்னும் தன்னிலை மாறாது, கடந்து வந்த பாதை மறவாது, உலகத்தின் க்ஷேமத்துக்கு வாழ்ந்த ரிஷிகளும் இல்லாமல் இல்லை. இங்கே UPSC என்பது கடுந்தவம்; வரம்- தேர்வில் வெற்றி. நீ அசுரனா, முனிவனா என்பதை முடிவு செய்! 

Comments

  1. எப்பொழுதும் ஒரு பணி என்பது தனி நபர் ஒழுக்கத்தையே சார்ந்தது அண்ணா ! இதில் பதவியைக் குறைகூறி எந்த விளைவும் ஏற்படப் போவது இல்லை. ஒரு சாதாரண கிராம நிர்வாக அலுவலராக இருப்பினும் அவரின் சேவையும் இந்த சமூகத்துக்கும் தேவையான ஒன்றே ! ஆனால் இங்கு பதவியில் இருப்பவர்களின் நிலையைக் கொண்டு பதவியே தவறு என்று சொல்வது முட்டாள் தனம்.
    இங்கு மிகப்பெரிய அரசியல்வாதிகள் கூட தான் தன் கடமை என்ன என்று தெரியாமலேயே ஆட்சி காலத்தை கடத்தி விடுகிறார்கள் ! இதற்காக மக்கள் தலைமையே தவறு என்று சொல்ல முடியுமா ?
    இங்கு தவறு தனி மனித ஒழுக்கத்திலும் , அவரின் சமூக அக்கறையிலும் தான் இருக்கிறதே ஒழிய பதவியில் இல்லை. ஆனாலும் இப்பொழுது இருக்கும் கல்விமுறையும் அதை பணத்திற்கு கூறுபோட்டு விற்கும் செயலும் மீண்டும் நம் இந்தியாவின் நிலையை அப்பட்டமாக காட்டத் தான் செய்கிறது !
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அண்ணா ! இதில் பதவி ஒரு தடை அல்ல..

    ReplyDelete

Post a Comment