Travelogue- 2 சோலையார் மழைக்காடுகள்

இதன் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க- https://amarabharathy95.blogspot.in/2017/05/travelogue-1.html

குழாய்ப் புட்டு 


  மனதுக்கு மிக திருப்தியாக அமைந்தது, காலைப் பயணம். காட்டில் மூவராக பைக்கில் செல்கையில் நான் ஒட்டியது, வேழாம்பல் ( இருவாச்சிக்கு மலையாளத்தில் வேழாம்பல் என்பர்!) பார்த்தது, அதன் குஞ்சுகளுக்கு சோறூட்டும் nesting behaviour ஐ கண்டது என மனம் நிறைவாய் வீடு திரும்பினோம். கடந்த இரவில் அப்பா கேட்டதற்காக  அவர்கள் வீட்டில் புட்டு செய்திருந்தனர். புட்டு என்ற பண்டம் அரிசி மாவினால் செய்யப்படுவதாகும். குழாய் போன்ற வார்ப்பில் அரிசி மாவும், துருவிய தேங்காயும் இட்டு ஆவியில் வேக வைத்தால் குழாய்ப் புட்டு தயார். பைஜு காலையிலேயே குளித்து விட்டிருந்தார், நானும் அப்பாவும் ஆற்றிலோ குளத்திலோ தான் குளிப்போம் என்று கூறிவிட்டதால், நாங்கள் குளிக்காமலேயே சாப்பிட அமர்ந்தோம். குழாய்ப் புட்டை சாப்பிட இரண்டு நியமங்களுண்டு. 

  1. மலை வாழையை புட்டுடன் பிசைந்து தொட்டுக் கொள்ள பப்படம் எனப்படும் கேரள அப்பளத்தை வைத்து சாப்பிடுவது.
  2. கொண்டைக்கடலைகள் வைத்து செய்த கடலைக் கறியோடு புட்டைப் பிசைந்து பப்படத்தோடு சாப்பிடுவது.
இவை இரண்டையுமே  தயார் செய்து வைத்திருந்தார் திருமதி.பைஜு.  நான் மூன்று முழு புட்டு சாப்பிட்டேன்! கடலைக் கறி சிறந்ததா, மலை வாழை சிறந்ததா எனப் பட்டிமன்றமே நடத்தலாம்- அவ்வளவு ருசியானது இரண்டும்!

பைஜுவின் குடும்பம் 

  புலியிலப்பாறா என்ற அந்த ஊரில் தன் அம்மா , மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார் பைஜு. குழந்தைகள்  அபின் சந்திரதேவ், கிரிசங்கர், ஜானகிதேவி முறையே 10, 5 , 3 வயதானவர்கள். பைஜுவின் அப்பா தமிழகத்தைச் சேர்ந்த பஸ் ஓட்டுனர். பைஜுவுக்கு இந்திய பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகியவற்றின் மேல் ஆர்வம் அதிகம். இப்போது தவளைகள் பற்றி ஆராய்ந்து வருகிறார் அவர். எல்லாவற்றிற்கும் முறையாக புத்தகமோ செல்பேசிச் செயலியோ ஒன்று வைத்துக் கொண்டு, தான் பார்க்கும் உயிரினத்தை உடனுக்குடன் சரி பார்க்கிறார். மலையாள மொழியிலேயே பட்டாம்பூச்சிகள், தவளைகள் - அவற்றின் செயல்பாடுகள், வாழிடம், குறித்த அற்புதமான செயலி இருக்கிறது. 

  ஆனால் இது போன்ற இயற்கை எழில் கொஞ்சும் ஊரிலுள்ள இளைஞர் பலர் குடிக்கும், பீடி புகைத்தலுக்கும் அடிமையாக உள்ளனர். " இங்க  இருக்குற உயிரினங்கள பத்தித் தெரிஞ்சுக்கணும்னு கூட அவசியம் இல்ல, ஆனா இப்பிடி குடிச்சிட்டு உடம்ப கெடுத்துக்காம இருக்கலாமே", என்று கூறி வேதனைப் பட்டார் பைஜு. இவரும் குடிகாரராக இருந்தவர் தான்.  குளித்தலை அருகில் உள்ள யோகினி ஒருவரிடம் தியான தீட்சை பெற்றவர் பைஜு! அதனால் முற்றாக அசைவத்தையும் குடிப்பழக்கத்தையும் விட்டுவிட்டார்.

இப்போது பைஜு என்ன செய்கிறார் என்றால், அதிரப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியிலே, பறவைகள் விலங்குகளின் வாழ்விடங்களை இயற்கை ஆர்வமுள்ள, இயற்கை உயிரினங்கள் குறித்து அறிவுள்ள, அன்புள்ள புகைப்பட வல்லுனர்களுக்குக் காட்டுகிறார். இயற்கை ஆர்வமும், உயிரினங்களின் மேலுள்ள அறிவும் அன்பும் ஏன் முக்கியம் என்றால், காட்டை நேசிக்கும் ஒருவராலேயே காட்டின் இன்றியமையாத தன்மையை உணர முடியும்! வெறும் புகைப்படம் எடுத்து முகநூலில்  dslr இல் படம் எடுத்து வரும் பலர் செய்யும் அராஜகங்களை வருத்ததோடு அவ்வப்போது பதிவு செய்தார் பைஜு. எனவே தான் அவர் மிக சிலருக்கு மட்டும் தான் உதவுவதாய்க் கூறினார்.  அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள பலர் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க கானுயிர் புகைப்பட ஜாம்பவான்கள்!

   மாபெரும் புகைப்படக் கலைஞர்களோடு பழகுவதால் பைஜுவே நமக்கு நல்ல புகைப்பட கோணங்களை சொல்லித் தருகிறார். அளவில்லாப் பொறுமையும், தகுந்த நேரத்தில் அசாத்திய வேகத்தில் முடிவெடுக்கும் திறனுமே நல்ல புகைப்படத்தை நமக்குப் பரிசளிக்கும்  என்பார் பைஜு.

     சுமார் ஒன்பதரைக்கு அப்பா குட்டித் தூக்கத்தை ஆரம்பிக்க, நான் காமிராவை சார்ஜில் வைத்தேன். பைஜு தன் பசுவுக்கு புண்ணில் கட்டு போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் பைஜு என்னை கூப்பிட்டு ஒரு வித்தியாசமான உயிரினத்தைக் காட்டினார். பெரும்பாலும் நாம் அனைவரும் பார்த்த ஆனால் உதாசீனப் படுத்தும் உயிரினம். மறதிக்குப் பெயர் போன- அரணை!நம் ஊர் அரணைகளைப் போல சிறிதாக அல்லாது ஒரு குட்டி உடும்பின் ஆகிருதி கொண்டது இந்த அரணை. மெதுவாக பாறை இடுக்கின் வழியே எட்டிப் பார்த்து, ஏதோ யோசித்து இங்குமங்கும் பார்த்தது.பின்னர் வந்த வேலை மறந்து பாறைக்குள்ளேயே மறைந்து போனது!

அரணை:



பட்டாம்பூச்சிகளின் உலகம் 

  பைஜுவின் வீட்டுக்கு எதிரில் பெருங்கல்குத்து அணைக்குச் செல்லும் சாலை செல்கிறது. அணையில் கேரளாவின் மின்வாரியம் மின்சாரம் தயார் செய்கிறது. அந்த அணைகட்டுக்குச் செல்லும் சாலை முகப்பில் பைஜு மலர்ச் செடிகள் நட்டு வளர்த்து வருகிறார்.அந்த  பூக்களில் எப்போதும் வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டம் ஆர்க்கிறது. விதவிதமான பட்டாம்பூச்சிகள்- நீல நிறம், பச்சை நிறம், ரெக்கையில் கண் போன்ற பொட்டுடைய பூச்சிகள்- வெறும் கருப்பும் பழுப்புமாக உள்ள பட்டாம்பூச்சிகள் மாறி மாறி அங்குள்ள பூக்களில் தேன் பருகுகிறது. பைஜு பட்டாம்பூச்சிகளை படம் பிடிக்கும் நுணுக்கங்களை கற்றுத் தந்தார். பட்டாம்பூச்சிகள் உருவத்தில் பறவைகளை விட சிறியவை. ஆனால் மாக்ரோ எனப்படும் நுண்படம் பிடித்தலும் பட்டாம்பூச்சிகளை படம் எடுக்க உதவாது. நேக்காக ஒளி மாற்றங்கள் செய்து நம் கண் மட்டத்துக்கு எடுக்க வேண்டுமென பைஜு  அறிவுரை கூறினார். 


மேலும் படங்களுக்கு-Flickr Butterfly pics


பெருங்கல்குத்து அணை

    அப்பா சுமார் பத்தரைக்கு தூக்கம் முடித்து எழுந்தார். ஏதாவது ஆற்றில் சென்று குளிக்கவேண்டுமென்று நானும் அப்பாவும் விரும்பினோம். பைஜு எங்களை குளிக்கத் தயாராய் வரச்சொன்னார்.  மிகவும் உற்சாகத்துடனும், ஆவலுடனும் நானும் அப்பாவும் கிளம்பினோம். பைஜு காட்டு வழியே எங்களை இட்டுச் செல்லலானார்...







   காட்டு வழியே சென்ற நாங்கள் ஒரு பாறைபாங்கான சமதளத்தை அடைந்தோம். அங்கே  forest wagtail என்னும் அரிய பறவையைப் பார்த்தோம். wagtail-வகைப் பறவைகள், வாலாட்டிக்கொண்டு திரிபவைகள். நகர்ப்புறங்களிலும் பொதுவாக காணப்படும் wagtail பறவைகள் உண்டு. ஆனால் forest wagtail சற்றே கூச்சமுள்ள அரிய பறவை. அதிலும் நாங்கள் பார்த்த அந்த பறவை அதன் இயல்புக்கு மாறாகத் தன் வாலை ஆட்டவே இல்லை! காமிராவில் பார்த்தபோது தான் தெரிந்தது அதற்கு ஒரு கால் இல்லை என்று. கால்கள் இல்லாததால் அதனால் வாலாட்ட முடியவில்லை. பிறப்பிலேயே இப்படி இருப்பதும் உண்டு, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தானாகவே உறுப்பிழப்பதும் உண்டு என்று பைஜு கூறினார்.

காலிழந்த forest wagtail :



      பயணத்தை மேற்கொண்டு காட்டு வழியே தொடர்ந்தோம். பெருங்கல்குத்து அணையின் நீர்தேக்கப் பகுதியை அடைந்தோம்! அங்கே lapwing எனப்படும் ஆள்காட்டிப் பறவை எங்களை நோக்கி தாழப் பறந்து எச்சரிக்கை காட்டியது. இது ஆள்காட்டி பறவையின் இயல்பான செயல். தரையில் கூடு கட்டும் இந்தப் பறவை, அந்த இடத்தில் மனிதர்களோ விலங்குகளோ வந்தால் பறந்தும் தொடர்ந்து குரல் எழுப்பியும் எச்சரிக்கை செய்து தன் கூட்டைக் காப்பற்றும்!

ஆள்காட்டிப் பறவை:



களிமண் குளியல் 

   அணையில் குளிக்கச் சென்றால், எங்கு போனாலும் களிமண்.  பத்து வினாடிக்கு  அதிகமாக காலை மண்ணில் பதித்தால், உள்ளே மேலும் மூழ்கிப் போகிற களிமண்! காலை ஒவ்வொரு நொடியும் மாற்றி மாற்றி வைத்து குளிக்க வேண்டும்.  அப்படி காலை எடுத்து மண்ணில் பதிக்கும் போது, காலம் காலமாய் களிமண்ணின் துகள்களுக்கு நடுவில் சிக்குண்ட காற்றுத் துளிகள் குமிழிகளாக வெளிப்படும். அந்த குமிழிகள் நீரின் மட்டத்துக்கு மேலேறும்போது உடலில் பட்டு கூசச் செய்யும்- முதல் முறை மீன் தான் ஊறுகிறதோ என்றெண்ணினேன். உண்மையில் ஊறியது நீர்க்குமிழி! அப்பாவும், பைஜுவும் களிமண்ணை உடல் முழுதும் பூசிக்கொண்டு போஸ் கொடுத்தனர்:



பைஜு:




    அணைக் கரையில் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக mud puddling என்னும் மண் தின்னும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சிகள் தனது தும்பிக்கையை சுத்தம் செய்யவும், தனக்கு தேவையான புரதச் சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் இப்படி மண் தின்பது இயல்பு. நாம் பட்டாம்பூச்சிகள் அவ்வாறு நீர்க்கரையில் கூட்டமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அதன் முக்கியத்துவத்தை பைஜு கூறிதான் தெரிந்து கொண்டேன்! ஒவ்வொரு உயிரினமும் உணவுக்காக  என்னவெல்லாம் செய்கிறது!

mud puddling 
குளியல் முடியும் கட்டத்தில் எங்கள் எதிர்கரையில் நீர்நாய் எனப்படும் otter ஐ பார்த்தோம்! கீரியைப் போன்ற நீண்ட உடல்வாகுடைய நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்கு otter! அதனை சில வேட்டைநாய்கள் துரத்தி வந்ததால்,  பார்க்க முடியாதபடி வேகமாக நீர்நாய் தண்ணீருக்குள் இறங்கி மறைந்து விட்டது!

நிறைவு!

   களிமண்ணில் குளித்தது புது அனுபவம் தான். நீரிலிருந்து வெளியே வந்தும்கூட திட்டுத்திட்டாக களிமண் உடம்பில் ஒட்டி வெயிலில் காய்ந்து இறுகியது. வந்த காட்டுவழியிலே மீண்டும் வீட்டுக்குத் திரும்பினோம். வீட்டுக்கு மீண்டும் வரும்போதே மணி ஒன்றுக்கு மேலிருக்கும். அன்று மூன்று மணிக்கு கிளம்புவதாகத் திட்டமிட்டு இருந்தோம்.  வந்தவுடன்   அவரது வீட்டில் சாப்பிட்டோம்.நான் விரும்பிக் கேட்ட இருவாச்சியின் இறகை  எனக்கு பைஜு பரிசளித்தார்!  வீட்டிலுள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு பிரிந்தோம். 

      பயணம் முழுதும் மழையே இல்லை என்பது தான் எங்கள் இருவரின் வருத்தமும். அந்த வருத்தமும் ஊரில் இருந்து கிளம்பியதும் நீங்கியது. ஊரிலிருந்து கிளம்பிய பத்து நிமிடத்துக்குள் தூரல் லேசாக ஆரம்பித்தது. பின்னர் அது மழையாக வலுபெற்றுத் தொடர்ந்தது.  மழையில் மண் வாசமும் யானை லத்தி வாசமும் கலந்து காடே மணந்தது. சற்று நேரத்தில் ஹெல்மட்டும் கண்ணாடியும் நீரால் நிறைந்து விழி மறைத்தது. பத்தடி கூட முழுதாக தெரியாத மழை- காற்றில் குளிர்- கொண்டைஊசி வளைவில் வண்டியை செலுத்த வேண்டும்-  சிலிர்ப்பூட்டும் அனுபவம்.  சொட்டச்சொட்ட நனைந்து போய் இருந்தோம். சனிக்கிழமை மாலை நேரமென்பதால் வண்டிகளின் வரத்தும் அதிகம் இருந்தது. திடீரென்று எதிரில் வரும் வண்டிகள் குறைந்தது. அடுத்த திருப்பத்தில் மரம் முறிந்து இருந்தது- இடமிருந்து வலப் பக்கத்திற்கு முற்றாக சாய்ந்து இருந்தது மரம்! என்ன செய்வதென்று தெரியாமல் வண்டியை விட்டு இறங்கினோம். இழுக்கக் கூட முடியாத பாசம் பிடித்த வழுவழுப்பான நெடு மரம்! 

  ஓயாத மழையில் எங்கள் பின்னால் இன்னும் இரண்டு வண்டிகள் வந்து சேர்ந்தது. பத்து நிமிடத்தில் ரெண்டு இன்னோவா கார்கள் நிறைய கேரள இளைஞர்கள் பாடிக்கொண்டே வந்தனர். பின்னர் அனைவரும் இறங்கி ஒரு பாகத்தை மட்டும் கேரள பொதுப் பணித்துறையினர் கொண்டு வந்த கோடரியால் வெட்டி, மீதி பாகத்தை பாகுபலி என்று கத்திக் கொண்டே இழுத்தோம்! இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் இடைவெளி கிடைத்தது. கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். ஒரு ஐந்து கிமீட்டர் சென்றிருப்போம்- சுத்தமாக மழை பெய்த சுவடே இல்லை! இது தான் காடு-எப்போது மழை பெய்யும் எப்போது வெயில் அடிக்கும் என்றுத் தெரியாது!

  கேரள எல்லைத் தாண்டும் முன்னர் நாங்கள் வரும்போது பார்த்த mountain imperial pigeon ஐப் பார்த்தோம். கேரள எல்லை தாண்டி தமிழகம் வந்தது ஆறு மணிக்கு. பின்னர் நான் சோலையாரில் வண்டி ஓட்ட எடுத்தேன். மழையே பெய்யாது என்று வெறும் சட்டை மட்டும் அணிந்து சுவெட்டர் கொண்டு வராமல் விட்டதின் மடத்தனம் வால்பாறை வந்து தான் புரிந்தது. வால்பாறையில் பனி படரும் பகுதிகள் அதிகம். மழையில் நனைந்த சட்டை காயாமலேயே பனியில் ஓட்ட முடியாமல் குளிர் வாட்டியது. கைகள் தன்னிச்சையாகத்  தட்டச்சிட்டன.  பற்கள் நடுங்கின. வண்டியை சாலை ஓரம் நிறுத்தி, அப்பாவை ஓட்டச் சொன்னேன். அவர் உஷாராக கோட் எடுத்து வந்திருந்தார். வால்பாறை தாண்டி அட்டகட்டி வரும்வரை குளிரில் நடுங்கிக் கொண்டே வந்தேன். வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது. வாழ்வின் முன்னும் பின்னும் எப்போதும் கிடைக்காத அனுபவம் இந்த ஒன்றரை நாளில் கிட்டியது!

  நன்றி சொல்லவேண்டியது அப்பாவுக்கும், பைஜுவுக்கும் தான்! ஒரு நல்ல on-road கானுயிர்ப் பயணம் இவ்வாறு சுபமாய் நிறைவடைந்தது!

                                                                 ~சுபம்~ 


Comments

  1. beautiful write up. i felt we were travelling with you.

    ReplyDelete

Post a Comment