Travelogue- 1 சோலையார் மழைக்காடுகள்!

      பல நாள் திட்டம் இது- வால்பாறை வழியாக அதிரப்பள்ளிக்கு பைக்கில் செல்லவேண்டுமென்பது.  இந்த முறை கோடையானாலும் வால்பாறையில் பனியும் மழையுமாக இருப்பதாகக் கேள்விப்படவே பைக் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம் நானும் அப்பாவும். எங்கள் பைக் ஹோண்டா unicorn. பெரிதும் சத்தம் எழுப்பாத, அதிராமல் 80 கிமீ வேகத்தில் பயணம் செய்யச் சரியான வாகனம்!

  எங்கள் ஊரான உடுமலையில் இருந்து ஆழியார் அணைக்குச் சென்று பின்னர் வால்பாறைக்குச் செல்லும் மலை ரோட்டைப் பிடிக்கவேண்டும். மே ஐந்தாம் தேதி மதியம் ஒன்றரை மணிக்காக இங்கிருந்து புறப்பட்டோம்! அன்றிரவு எங்கள் நண்பர்- பறவைகள் ஆர்வலரும், கேரளா அரசின் green passport பெற்றவருமான பைஜு அவர்களது வீட்டில் தங்குவது என்று திட்டம். (பள்ளி மாணாக்கருக்கும்  சூழலியல் வல்லுனர்களுக்கும்   கேரள அரசு  வழங்கும் green passport குறித்து அறிந்துகொள்ள மேற்கண்ட லின்கை சொடுக்கவும்). அவரது வீடு அதிரப்பள்ளிக்கு சில கிமீ முன்னாலேயே புலியிலப்பாறா என்னும் இடத்தில் உள்ளது. அந்த  ஊர் வால்பாறை சோலையார் அணையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. எங்கள் ஊரில் இருந்து சோலையார் அணை 100கிமீ தூரம்.


  ஒன்றரை மணிக்கு கிளம்பிய நாங்கள் , குறைந்தது 5 மணிக்குள்ளாக,சோலையார் அணை தாண்டி அமைந்துள்ள  தமிழக-கேரள எல்லையை அடையவேண்டும். ஏனெனில் இருட்டிய பின்னர் சோலையார்-அதிரப்பள்ளி ரோட்டில் பைக்குகளை அனுமதிக்க மாட்டார்கள். காரணம்- மழைக்காட்டில் அமைந்துள்ள அந்த ரோடு- உலகத்திலேயே மிகப்பெரிய யானைகள் போக்குவரத்து வழி அதாவது - world's biggest elephant corridor! எப்போது வேண்டுமானாலும் மழை பெய்து மரம் முறியலாம்- யானைகள் உலா வர வாய்ப்புண்டு- மேலும் மழை பெய்யாமலும் பனியினால் இருட்டி விபத்தாகவும் வாய்ப்புண்டு- இதனாலேயே ஐந்து மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை! வீட்டிலிருந்து ஆழியார் அணை வரை நான் ஓட்டினேன். பின்னர் மலை பாதை ஆரம்பத்தில் அப்பா ஓட்டினார்- இதற்குக் காரணம் உண்டு- சின்னப் பயல்கள் வண்டி ஓட்டி வருவதைப் பார்த்தால் தமிழக வனத்துறையினர் அசடு வழிந்தவாறே தலை சொறிவர். அவர்களுக்கு தண்டம் அழவேண்டி வரும். வால்பாறை செல்லும் மலை ரோட்டில் மொத்தம் 40 கொண்டைஊசி வளைவுகள் உண்டு. வழியில் ரொட்டிக்கடை என்னும் ஊர் வழியாக வலப்பக்க   ரோட்டில் திரும்பி  சோலையார்    அணைக்குச் செல்ல  வேண்டும். செல்லும் வழி நெடுக தேயிலை தோட்டங்களும், அங்கங்கே பாக்கு மரங்களுமாக, வானிலையும் அற்புதமாக இருந்தது. எல்லைக்குச் சென்று கேரள போலீசில் கையெழுத்து போடும்போது மணி- நான்கரை! எல்லை கடந்து மலக்கப்பாறை என்னும் இடத்தில் இருவரும் டீ அருந்தினோம். பின்னர் அவ்விடத்தில் இருந்து நாங்கள் தங்கப் போகும் வீடு வரை நான் தான் வாகன சாரதி!

பயணமும் பறவைகளும்:


   மலை ரோடானாலும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சாலை அது. ரோட்டின் இருபுறமும் வெள்ளை சாயம் அடித்து எல்லைகள் அமைக்கப்பட்டிருக்கும். தமிழக சோலையார் போல கேரளாவிலும் சோலையார் அணை உண்டு. தமிழக சோலையார் upper சோலையார் எனவும் கேரள சோலையார் lower சோலையார் எனவும் அழைக்கப்படும். lower சோலையார் வரை காட்டுக்குள் செல்லும் சாலை, பின்னர் பள்ளத்தாக்குகள் வழியே அதிரப்பள்ளி வரை நீள்கிறது. 

   சாலையில் 5 மணிகெல்லாம் பூச்சிகளின் ஓயாத சத்தம். அவ்வப்போது தவளைகள் தம் பங்குக்கு இரைச்சல் கொடுக்கும். மலக்கப்பாறை தாண்டியதும் சற்று தொலைவிலேயே  தமிழக மாநிலப் பறவையான மரகதப் புறாவைக் கண்டோம். சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பறவை எங்களைப் பார்த்ததும் சிறகடித்து பறந்துபோனது.
மரகதப் புறா (நன்றி:விக்கிபீடியா)
மழை இல்லையென்றாலும் ஆங்கங்கே சாலை ஈரமாக இருந்தது வைத்துப் பார்க்கும்போது அன்று காலையிலோ, முந்தாநாள் இரவிலோ மழை பெய்திருக்க வேண்டும். வழி நெடுக Whistling Thrush என்னும் பறவை அழகாக விசில் அடித்தபடியே இருந்தது. கருநிற மேனி கொண்ட அந்தப் பறவையின் மிக அரிய வரப்பிரசாதம் அதன் குரல்- மனிதன் விசில் செய்வது போலிருக்கும்.  (அதன் இசையைக் கேட்க- malabar whistling thrush )



கருங்குரங்கு 
ஆங்காங்கே கருங்குரங்குகளும் மலபார் மலை அணில்களும் மரங்களில் இரை தேடிக்கொண்டிருந்தன. மலை அணில்கள் சாதாரண அணில்களைக் காட்டிலும் பெரியது. பளபளப்பான தோல் நிறமுடையது. பழ மரங்களில் வாழ்ந்து வருபவை. ஆழமான குரலெடுத்துக் கத்தும்.
அத்தி மரத்தில் மலபார் மலை அணில்


lower சோலையாரை நெருங்கும்போது எதிரில் மரக்கிளையில் மிகப்பெரிய பறவை தென்பட்டது. நாங்கள் இருவரும் பறவைகளை நோக்குபவர்கள் என்பதால் பறவைகளைக் கண்டால் நின்று பார்த்து படம் பிடித்து விட்டு தான் செல்வோம்! வண்டியை ரோட்டோரமாக நிறுத்தி, கழுகு சைசுக்கு இருந்த அந்த பறவையை கேமராக் கண்ணில் பார்த்தால் அது ஒரு வகைப் புறா- mountain imperial pegion தான் அது!

ரொம்ப நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தது அந்தப் பறவை. அது அமர்ந்திருந்த மரத்துக்கு அருகில் மலபார் Hornbill எனப்படும் இருவாச்சிப் பறவை இருந்தது. 

இருவாச்சியின் நிழலுருவம்:



  இரண்டு சோலையார் அணைகளிலும் தண்ணீர் குறைவு தான். Lower சோலையார் வெறும் மைதானம் போல் இருந்தது. ஆனால் வானிலை மந்தமாக மழைக்கு கட்டியம் கூறுவது போல அமைந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பனி படர்ந்து பள்ளத்தாக்குகளின் இரு மருங்கிலும் வழிந்தோடிய காட்சி அற்புதம்!



பைஜு

  அங்கிருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியெங்கும் யானை லத்தி இருந்தது. அத்திப் பழ வாசனையும் யானை லத்தி வாடையும் சேர்ந்து அந்தக் குளிர் காற்றில் இனிப்பான ஒருவித மணமாகப் பரவிற்று. ஆறரை- ஏழு மணிக்கெல்லாம் புலியிலப் பாறா அடைந்தோம். அங்கே பாம்பு பிடிக்கும் பைஜு வீடு எங்கே என்று கேட்டு செல்லச் சொன்னார் பைஜு. விசாரித்ததில் ரோட்டோரமாகவே இருந்தது அவர் வீடு. வீட்டில் அவர் இல்லை. ஆனால் நாங்கள் வருவோமென்று சொல்லி வைத்திருந்தார். கொண்டு வந்த பைகளை அவர் வீட்டில் இறக்கி வைத்தோம். அவர் அதிரப்பள்ளி அருகே சென்றிருப்பதாக அறிந்தோம். அங்கேயே சென்று அவரைக் காணலாமென்று கிளம்பியவுடன் அவரே வந்து சேர்ந்தார். அவருடன் பேசிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தோம்.

  காடுசூழ் ஊரில் அந்த ஊரில் சுமார் 100 வீடுகள் இருக்கும்.  தாழ்வான கதவு கொண்ட அவரது வீட்டில், ஒரு படுக்கையறை, கிச்சன், பின்புறம் கிணறு மற்றும் நன்கு கட்டப்பட்ட அட்டாச்ட் பாத்ரூமும் டாய்லட்டும்! அவர் வீட்டுக்கு எதிரிலேயே கேரள அரசின் மின் வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள பெருங்கல்குத்து அணைக்குச் செல்லும் பாதை பிரிகிறது. சோலையாரில் இருந்து இவர் வீடு வரையில் மட்டும் 3 இடங்களில் KSEB எனப்படும் கேரள மின்வாரியம் அணைகள் உள்ளன. Check dam ஆக இருந்தாலும் அவற்றில் மின்சாரம் உறிஞ்சும் சூரர்கள் இவர்கள். காடாய் இருந்தாலும் இங்கே மின்வெட்டு இல்லை. எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் உண்டு. மூலை முடுக்கில் மலையில் காட்டில் எங்கிருந்தாலும் மின்சாரம் வழங்குகிறது கேரளா. இங்கே நாம் இப்படி இருக்கும் எத்தனை மலை கிராமங்களுக்கு இன்னும் மின்சாரக் கம்பங்கள் கூட கட்டவில்லை என்று யோசித்தால் தான் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று புரியும்.

   இரவு உணவருந்திவிட்டு, டார்ச் எடுத்துக்க கொண்டு அவரது வழிகாட்டுதலில் காட்டில் நடந்தோம். காட்டில் ceylon nightjar இருப்பதாகக் கூறினார். ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் அங்கு அந்தப் பறவை இல்லை. மரம் ஒன்றில் asian flying squirrel எனப்படும் பறக்கும் அணிலைப் பார்த்தோம். இரவு நேரத்தில் இரை தேடும் விலங்கான அது இலை தழை, பழம் உண்டு வாழ்கிறது. மரத்துக்கு மரம் தாவ ரெக்கை போன்ற விரிந்த கைகள் உள்ளதால், கால்கள் குட்டையான விலங்கு அது. ஊரின் எல்லையாக ஒரு தேவாலயம் இருக்கிறது. அதன் அருகில் சென்றபோது புஸ் புஸ்சென்ற சத்தம் கேட்டது. பைஜு இது ஒற்றைக் கொம்பனின் சத்தம். இங்கிருந்து போகலாம் என்றார். ஒற்றை ஆண் யானை எப்போதுமே கொஞ்சம் கோபக்காரனாய் இருக்கும். எனவே அதன் வழியில் குறுக்கிடாது நாங்கள் திரும்பிவிட்டோம்.

  போய் வரும் பாதை முழுவதிலும் மின்மினிப் பூச்சிகள் தம் ஒளியை பகிர்ந்த வண்ணம் திரிந்து கொண்டிருந்தன. பைஜு கூறினார்: இந்த மாறி ஒரு மரம் முழுவன் மின்மினிப் பூச்சி சுத்தி இருக்கும். அப்போ அந்த மரத்தைப் பார்க்கவே பிரகாசமா அற்புதமா இருக்கும்! 

cicada என்னும் பூச்சிகளின் ரீங்காரம் காட்டின் தனிமையை அகற்றும். இது தவிர தவளை வகைகளும் கத்திக் கொண்டிருக்கும்.cricket என்னும் பூச்சியையும், தேள் ஒன்றையும், எங்களுக்கு பைஜூ காட்டினார். தாவரங்களும் பட்சிகளும், பூச்சிகளும், இவற்றால் விலங்குகளும் ஒன்றிணைந்து வாழும் சங்கிலியை எண்ணி எண்ணி வியக்கலாம். செடிகளும் மரங்களும் பட்சி- விலங்குகளின் உறைவிடம் மற்றும் உணவுக்கு உதவும். பூச்சிகளில் பலவும் pollination எனப்படும் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. இந்த மழைக் காடுகளின் சங்கிலிக் கண்ணியில் மிக மிக இன்றியமையாத உயிரினம் ஒன்றுண்டு- அதுவே இருவாச்சிப் பறவை. 


இருவாச்சி!

    வாய்க்குமேல் அமைந்த தடிமனான casque என்னும் உறுப்பால் இதற்கு இரு வாய்கள் இருப்பது போல் தோன்றும்- இதனாலேயே இதற்குப் பெயர் இருவாச்சி. பக்கவாட்டில் இந்த casque ஆனது  கொம்பைப் போலத் தோன்றும் இதனால் ஆங்கிலத்தில் இதன் பெயர் hornbill (கொம்பு-horn;வாய்-bill) இவைகளில் பல வகைகள் உண்டு. இருவாச்சிகளில் பெரியது-Great Indian Hornbill. பெரிதான கருடப் பட்சியை விடப் பெரியது இது. பரந்த wingspan எனப்படும் இரு-கை நீளம் கொண்ட இந்தப் பறவை பூச்சி மற்றும் பழம் உண்ணி.  இதிலேயே சிறியது தான் நாம் முன்னர் பார்த்த malabar grey hornbill. வெறும் வெள்ளை மற்றும் கருநிறமுடையதுPied hornbill எனப்படும்.











முன்னது ஆண் இருவாச்சி, பின்னது பெண் பறவை. கண் சிவப்பாக இருந்தால் ஆண், வெள்ளையாக இருந்தால் பெண்!



மறுநாள் காலை 

  அடுத்த நாள் காலை 6 மணிக்கு பறவை பார்க்க கிளம்பினோம். எதைப் பார்க்கப் போகிறோம்? எந்த விலங்கு/பறவை காணக் கிடைக்குமோ? என்ற சஸ்பென்ஸ் உடனும் குறைவிலாத உற்சாகத்துடனும், காலையில் பைஜுவுடன் பயணப்பட்டோம்! அவரது வீட்டிலிருந்து 5 கிமீயில் சாலக்குடி நதி செல்கிறது. இந்த நதிதான் அதிரப்பள்ளியில் 
வெள்ளச்சாட்டமாய் (அருவிக்கு மலயாளத்தில் வெள்ளச்சாட்டம்!) விழுகிறது! சாலக்குடி ஆற்றின் மேலுள்ள பாலத்திற்குக் கூடிச் சென்றார்.இரு புறங்களிலும் அந்த கோடையிலும் வற்றாமல் ஓடும் ஆறு. ஆற்றின் கரைகளில் வான்முட்டும் மழைக் கட்டின் மரங்கள். மரங்கள் தோறும் பலவகைப் பட்சியினங்கள்! ரெட்டைவால் குருவிகள், ராக்கெட் வால் கரிச்சான்கள், மீன்குத்திகள், பாம்புத்தாரை பறவை , நாரைகள் , இவற்றோடு அரிதிலும் அரிதான endangered பறவையான Great Indian Hornbill! ஒரு இருவாச்சி ஜோடியாக இங்குமங்கும் பறந்தபடி இருந்தது. 

  அரிதினும் அரிது என்று சொல்லவும் காரணம் உண்டு. எத்தனையோ பறவை ஆர்வலர்கள் காண விரும்பும், ஆனால் காணக் கிடைக்காத பறவை இது. இதன் ரெக்கை அசைவுகள் ஹெலிகாப்டரின் சத்தத்தைப் போன்றிருக்கும். மேலும் காடுகளுக்கு உள்ளே செல்லாமல் சாலையிலேயே காண்பதும் அதிர்ஷ்டம் தான்! மாறி மாறி பல்வேறு இடங்களுக்குத் தாவித்தாவிச் சென்று கொண்டிருந்த இருவாச்சியை படம் பிடித்தேன். ஒரு மரத்தில் இந்த பெரும் இருவாச்சியை, கரிச்சான் குருவிகள் சில துரத்தியது. மேலும் அந்த இடத்திலேயே Stork Billed Kingfisher என்ற வகை மீன்கொத்தியையும் கண்டோம்!

பொந்திற்குள் இரு கண்கள்

 பைஜு எங்களை பாலம் தாண்டி ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்றார். சாலையில் ஒரு மரத்தைக் காட்டி அதன் பொந்தை கவனிக்கச் சொன்னார். "பொந்துக்குள்ள ரெண்டு கண்ணு தெரியுதா?" என்றார். பொந்துக்குள்ள கண்ணா? என்று வியந்து பார்த்தால், அவர் சொன்னது போலவே பொந்துக்குள் இரு கண்கள்.

பொந்துக்குள் கண்கள்: 


இதை பற்றி மேலும் கூறுவதற்கு முன் இருவாச்சிப் பறவைகளின் ஒரு பழக்கத்தைப் பற்றி கூறவேண்டும். இருவாச்சிகள் முட்டை இட்டு பின் குஞ்சு பறக்கும் பருவம் எட்டும் வரை ஒரு மர பொந்தில் தாயையும் சேய்ப் பறவையையும் தந்தைப் பறவை வைத்து, தலை மட்டும் நீட்டும் அளவுக்கு இடம் விட்டு பொந்தின் பெரும்பகுதியை மூடிவிடுகிறது. பின்னர் தாய்க்கும் சேய்க்கும் உணவு தருவது தந்தைப் பறவை தான்! அத்திப் பழம், முந்திரிப் பழம், சிறு பூச்சிகள் ஆகியவற்றைத் தன அலகில் சேர்த்து வந்து ஊட்டி விடும் காட்சி அலாதியானது! அன்பும் அழகும் ததும்பும் நிகழ்வு அது. பைஜு எங்களுக்கு காட்டியதும் அதைத் தான்! அந்தக் கண்கள் Malabar grey hornbill உடையது! தந்தைப் பறவை அத்திப்பழம் கொண்டு வந்து ஊட்டுவதை நிதானமாக படம் பிடித்தேன்.

வாயில் இரையோடு தந்தைப் பறவை:

 பறந்து வந்து இறங்கும் காட்சி:


ஊட்டிவிட்டுத் தன் அலகை உயர்த்தி அடுத்த பறவைக்கு இரையளிக்கும் காட்சி 

 காலையில் ஆறு மணிக்குக் கிளம்பி இங்கு வந்து எட்டு மணி வரை இருந்து சென்றோம். நேரம் சென்றதே தெரியவில்லை எங்களுக்கு. தந்தைப் பறவை இரை கொடுக்க வந்தது, Great Indian Hornbill பறவைகளைப் பார்த்தது, அந்த அழகிய காலி வேளையில் பாலத்தின் கீழே நீரின் சலசலப்பும், வானில் மெதுவாய் மெதுவாய் படர்ந்து எரிய சூரியனும் எங்கள் மனதை விட்டு நீங்காத அழகிய நினைவுகள்... 



குழாய்ப் புட்டும், அரணையும், நிறங்கள் பலவிதமான பட்டாம்பூச்சிகளும், களிமண் குளியலும் அடுத்த பாகத்தில்......! 

அடுத்த பாகம்-இரண்டாவது பாகம்....

Comments

  1. அற்புதம்... அழகிய உலகம்..

    ReplyDelete
  2. அற்புதம்... அழகிய உலகம்..

    ReplyDelete
  3. Good article! you take me back to my native (Pandalur @ Nilgiris ).
    The clicks of Malabar grey hornbill is more than amazing..

    ReplyDelete
    Replies
    1. Oh wow!! Thank you Afasja!!

      Delete
    2. அழகான ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போன்ற தெள்ளிய எழுத்து நடை.

      Delete
    3. நன்றி Arulagam!

      Delete
  4. excellent travelogue, enjoyed reading. looking forward to part 2 of this.

    ReplyDelete
    Replies
    1. Thank you sir! It's great to hear from you!!

      Delete
  5. தங்கள் அனுபவம் எங்களையும் சோலையார் செல்ல தூண்டுகிறது...

    ReplyDelete

Post a Comment