#nostalgic note 3 சுழற்காற்று!

    உலகிலுள்ள பிரச்சனைகள் அனைத்தின் மூலமும் ஒப்பீடுகள் என்றே நான் எண்ணுகிறேன்.  யாருடனாவது ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்து நான் பெரியவன், எங்கள் துறை தான் சிறந்தது என்று கூறிக்கொள்கிறார்கள். அது இருக்கட்டும்; ஆனால் நீ தாழ்ந்தவனாதலால் நான் உயர்ந்தவன் என்று சொல்லுதல் எந்த வகையில் சரியாகும்? விஜய் படங்களைக் கலாய்த்து தானே அஜித் மேலானவன் என்று நிறுவுகிறார்கள்! இது இந்த சமூகத்தில் மேல்தட்டில் உள்ளவர்களும் தன்னிச்சையாய் செய்யும் தவறு. Biomedical துறையா, நீ சிறிய துறையாயிற்றே, mechanical , ECE , EEE ஆ நீங்கள் பெரிய துறை என்று கல்லூரி அதிகாரிகளே நினைக்கும்போது எனக்கு பரிதாபமும் சிரிப்பும் தான் மேலிடுகிறது. நானும் BE தான் mechanical மாணவன் வாங்கும் பட்டமும் BE தானே? எங்கே இருக்கிறது ஏற்றத் தாழ்வுகள்? படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் கூட எங்குள்ளது பேதம்? இந்தியாவில் எல்லாரும் சமம் தானே? குடியரசுத் தலைவரே கூட First among EQUALS தானே? எங்கிருந்து எதை ஒப்பிட்டு, எதை நிருபிக்கப் போகிறோம் நாம்? 

     இரண்டாமாண்டின் இறுதியில் NSS கேம்பில் எந்த பேராசியரோடு வாக்குவாதம் புரிந்தேனோ, அவரே எங்களுக்கு மூன்றாமாண்டில் முதல் வகுப்பு எடுக்க வந்தார்! மூன்றாமாண்டிலேயே நண்பர்கள் நிலைபெறுகிறார்கள். தேவை இல்லாதவர்களை நிராகரித்தும், அருமையானவர்களோடு பழகி நெருக்கமடையவும் இதுவே நல்ல சந்தர்ப்பம். தனித்துவம் மிக்க மனிதாக ஒருவன் உருவாகும் சமயமும் இது தான்.

    எங்கள் கல்லூரியின் சிறப்புகளில் ஒன்று- எத்தனையோ மாணவர் குழுக்கள் இங்கு உண்டு; ஆடல்-பாடலுக்கு, சமூக சேவைக்கு, சுய முன்னேற்றத்துக்கு என்று ஏராளம் குழுக்கள் உண்டு. அவைகளில் பலவற்றின் செயல்பாடுகள் அந்தந்த குழுக்களின் கொள்கையிலேயே முரண்படுவதாய் இருந்தது. சிலவற்றிற்கு கொள்கைகளே இல்லை! வருஷ ஆரம்பத்தில் ஒன்று, வருஷாப்தியில் ஒன்று என்று ஏதேனும் விழா எடுக்க வேண்டும். அதற்காகவே சில மன்றங்கள் இங்குண்டு-தாம் உருவான நோக்கத்தையே மறந்து தேர்தல்களில் மக்களை ஏமாற்ற வியூகங்கள் அமைக்கும் அரசியல் கட்சிகள் போன்று! ஆச்சரியம் என்னவெனில் அதிகாரிகளும் ஆசிரியர்களும் அதையே பெரிதென்று எண்ணி வியக்கின்றார்!

  நிலைமை இப்படி இருக்க,மாணவர் தமிழ் வளர் மன்றம் என்னும் மாதவம் எங்கள் கல்லூரியின் தமிழ் மன்றம். தனக்கென்று ஒரு நோக்கமும், பாதையும்       கொண்டிருக்கும் ஒரு மன்றம். அதன் செயல்களால் அம்மன்றத்திற்கு நான் ஈர்க்கப்பட்டேன். தமிழ் சார்ந்த விவாதங்கள்,   உரையாடல்கள் என எப்போதும் உயிர்ப்போடு  இருக்கும் ஒரு மன்றம். தமிழ் நூல்களுடைய நூலகத்தை மாணவர்களே நடத்தும்  மன்றம் இது. இங்கு எனக்கும் பணியாற்ற வாய்ப்பு கிட்டியது மிகப்பெரிய திருப்புமுனை! வயது பேதமின்றி எல்லோருக்கும் கருத்துக் கூற இடமிருக்கும்   ஒரே இடம் கல்லூரியிலேயே இதுதான் என்பது   மறுப்பதற்கு அப்பாற்பட்டது.

 
      இரண்டாமாண்டில் ஏற்பட்ட அழுத்தத்தால் உருவான வெற்றிடம் மூன்றாமாண்டில் நீங்கப் பெற்றது. ஒரே ஒரு நீள நடையில், கல்லூரியில் இருந்து அடையாறு பாலம் வரையான அந்த நடையிலே, நானும் அவளும் அற்புதமான சிநேகிதர்கள் ஆனோம்! மறக்கமுடியாத ஒரு நிகழ்வாய் அமைந்தது அது. இவ்வாறே நாங்கள் Crime Partnerகள் ஆனோம்!

  பொறியியல் சேர்ந்திருக்கிறோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி பலருக்கும் வருவது மூன்றாமாண்டில் தான். மேலாண்மைப் படிப்புக்கு சேர்வதற்கு எழுதும் CAT தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன். CAT படிக்கும்போது தான் பிரச்சனைகளை வேறொரு  கோணத்தில் அணுகும் அறிவைப் பெற்றேன்.

    எல்லாரும் மூன்றாமாண்டில் செல்லும் IV நாங்களும் சென்றோம். நான் அடிக்கடி செல்லும் மூணாருக்கே சென்றது எனக்கு கடுப்பு. மொத்த வகுப்பே சென்றதால் மகிழ்ச்சி ஆரவாரமாய்ச் சென்றது IV. IV பலதரப்பட்ட அனுபவங்களைத் தருகிறது. இறுதியாண்டிற்கு முன்னர் அழகான புன்சிரி தான் IV. ஆடல் பாடலாய் பஸ் குலுங்க வளம் வருவது மகிழ்ச்சி தான் என்றாலும் மூன்றாம் மனிதனாய் ஒதுங்கி  இருந்து பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது- நாம் IV என்று போகும் இடமெல்லாம் கானகமும் மலைகளும் தான்- அவற்றின் அமைதியைக் குலைத்துக் கொண்டுதானே நம் மகிழ்ச்சி அமைகிறது! எத்தனை எத்தனை பேர் இவ்வாறு தம் வாழ்நாளில் காட்டின் அமைதியை குலைத்திருப்பர்? எத்தனை பேர் அங்கேயே புகை பிடித்தல் மது அருந்துதல் முதலிய அற்ப இன்பங்களை கண்டிருப்பர்? இயற்கை அமைதி காக்கிறது- இரு மனிதா உன்னைப் பழிவாங்க எனக்கு வேறு வழிகள் தெரியுமென மழையை நிறுத்தி நமுட்டிச் சிரிக்கிறது!



   டிசம்பர் புயலில் திருப்பதியிலும் சென்னையிலும் மாட்டியது நல்ல அனுபவம். கொஞ்சம் கூட தயார் ஆகாமல் இருந்த நம்மை "வச்சு செய்தது" மழை வெள்ளம். கோட்டூர்புர மக்கள் எங்கள் விடுதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதுவரை சாக்கடை ஓடிய அடையாற்றில் நன்னீர் பெருகி தூய்மையானது. எல்லாம் சில நாளைக்கே- வெள்ளம் வடிந்ததும் நாம் சாக்கடையை மீண்டும் ஆற்றில் கலந்தோம்.

   இயற்கையைப் பற்றிய விழிப்பும், பறவைகளைக் குறித்த அறிவும் ஆர்வமும் அதிகமான ஆண்டு இது. ஆறாத் துயரமாய் என்னை உருவாக்கிய என் பாட்டி காலமாகியதும் இந்த ஆண்டு தான். பிரிவென்பது என்னவென்றும், சாவின் சூன்யம் என்னவென்றும் என்னை அறியச் செய்த ஆண்டு.
    அன்பும்- வெறுப்பும், குழுக்களின் அலப்பறையும் - தனிமையும், புகழ்ச்சியும்- முதுகில் குத்துதலும் ஒரே நாணயத்தின் இரு புறங்கள் என்றுணர்ந்தேன். அன்பில் மகிழாமல் இருப்பது கடினமெனினும் வெறுப்பிலாவது கடுப்பாகாமல் இருக்க இயலுவோமே! அலப்பறையில் காணும் இன்பத்தை தனிமையிலும் காண வழி செய்வோமே! புகழ்ச்சியைப் போல் புறம் பேசுதலையும் ஏற்றுக்கொள்ளத் தயராகுவோமே!


Comments