#nostalgic note 2 - மோப்பக் குழையும் அனிச்சம்!

   சிலருக்கு CEGயில் படிப்பது மிகப் பெரிய கனவு. கனவு கைகூடாமல் வருந்தும் மாணவர்கள் இங்கு அதிகம். ஆனால் சிலருக்கோ இந்த ப்ராப்தி மிக எளிதில் வாய்த்து விடுகிறது. இப்படியாக வரும் மாணவர்கள்  சிலர் எளிதில் வாங்கிய இடம் தானே என்று CEGயின் பெருமை உணராது, தங்களது படிப்பையும் வீணாக்கி, பிறரையும் கெடுத்து  வைப்பர்.

  இரண்டாமாண்டு விடுதி அறை தேர்வு செய்யும் நேரத்தில் என் வகுப்புத் தோழர்கள் யாரும் இல்லாததால் வேறு துறை நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்க நேர்ந்தது. பின்னர் எங்கள் விடுதியில் முதலாமாண்டு மாணவர்களையும் சேர்ப்பதாக முடிவானபோது, அறை மாற்ற பணித்தார்கள். இப்போதாவது துறை நண்பர்களோடு சேர்ந்து இருக்கலாம் என்று எண்ணி பெட்டி படுக்கையோடு அவர்கள் அறைக்குப் போனேன்.

  போன வருஷமெல்லாம் நன்றாகப் பேசிப் பழகிய நண்பன், அறையில் இடமிருந்தும், மனதில் இடமில்லாததால், வெளியே போ என்றான். ஏனென்ற கேள்விக்குத் தக்க பதிலில்லை! அவனுக்குத் தான் அந்த அறையிலேயே 'வாய்' என்னும் உறுப்பு இருந்தது போலும்! மற்றவர்களும் என் துறை நண்பர்கள் தான் என்றாலும் அவர்கள் ஏனோ தங்கள் திருவாய் மலரந்தருளி எனக்கு பரிந்து ஒரு வார்த்தையேனும்  பேசவில்லை.
                           அதிர்ச்சி!
                           அவமானம்!
Image result for lonely person
             நம்பியிருந்தவர்களே கைவிட்டதால் உண்டான ஆற்றாமை!


  நல்லது, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று, அந்த wingஇல் கடைசியாய் குளியலறைக்குப் பக்கத்திலிருந்த. ஆக்கிரமிப்பற்ற ,அழுக்கான 
அறையில் தங்கலாம் என்று முடிவெடுத்தேன். அதுவே என் ஒரு வருட அறையாய் மாறிற்று! அந்த ஆண்டின் வனவாசம் அந்த அறையிலேயே கழிந்தது!

  அந்த வனவாசமே என் கல்லூரிக் காலத்தின் ஆகச் சிறப்பு வாய்ந்த காலம். காரணமேயில்லாமல் என்னைத் துரத்திய நண்பர்கள் அருகிலேயே தங்கியிருந்த இழிவு! பார்த்தாலும் பேச மாட்டார்; பேசினாலும் பதில் உரைக்கமாட்டார்; புல்லெனப் பார்ப்பார்; எப்படியாக இருந்த வனவாசத்தில் தான் ரம்யன் அறிமுகமானான். துறைத் தோழன் ஆனாலும் முதலாண்டில் அவ்வளவு பழக்கம் அவனோடு இருந்ததில்லை. இரண்டாவது மாடியில் இருக்கும் அவன் அவ்வப்போது என் அறைக்கு வருவான்- இரவில் என் அறையில் தூங்கவும் செய்வான். எல்லாரும் என்னை  புறக்கணிப்பதாய் தோன்றிய போதும் எனக்காக வந்திருந்து கூடவே இருந்தவன் அவன். ரெண்டு அறை தள்ளி இருந்த பிரசன்னாவும் அவ்வப்போது என்னோடு பேசுவதுமாக இருந்ததில் ஒருவாறு வனவாசமும் இனியதாகி வந்தது.

   இரண்டாமாண்டில் எனக்கு தனிமைதான் நெருங்கிய உறவு. அதனோடு பழகி, அதன் சிறப்பினை  உணர்ந்து, அதன் வலியையும் நன்கு அறிந்து வைத்திருந்தேன். இரண்டடி பயணத்தில் தெரிந்தவர்கள் அறை இருந்தாலும் வாட்டுகிற தனிமை! அப்போது எனக்கு laptopஉம் இல்லையென்பதால் WiFi இருந்தும் பயனில்லை. புத்தகங்களே எனக்கு அப்போது துணையாயின...
                             நான் .. தனிமை.. புத்தகங்கள்!

   தமிழ்ச் சிறுகதைகளும், ஆங்கில நாவல்களும் படித்தேன். எந்த நாவல் படிக்கலாம், யாரைப் படிக்கலாம் என்பதற்கெல்லாம் wikipediaவே  துணை! Paulo Coelhoவின் The Alchemist, Zahir, Winner Stands Alone, Mario Puzoவின் The Godfather, Family ஆகியவைகளை ரசித்துப் படித்தேன். Micheal Corleone ஆகவே என்னை நினைத்துக் கொண்டு Al Pacino ஆக மாறி போலி உலகில் வாழ்ந்திருந்து என் தீராத தனிமையைத் தீர்த்துக் கொண்டேன்!

    வாசித்தல் உண்டானதில் எனக்கென சில கண்ணோட்டங்கள் உண்டானது; கருத்துக்கள் உருவானது; மேம்பட்டதாகியது பேச்சு நடை. ஓஹோ! இப்படித்தான் தனிமை நமக்கு உதவுகிறது போலும் என்றுணர்ந்தேன்! தனிமையுடன் நட்பானேன்!

   படிப்பும் அப்படி இப்படியென்று போகலாயிற்று! வகுப்புகள்- LAB- ASSIGNMENT- RECORD-  என்று அச்சுப் பிழையின்றி  சுழன்றது இயந்திரம். இந்த  ரெக்கார்டுகள் ஏன்தான் இருக்கிறதோ? இவையெல்லாம் எப்படி உதவுமோ என்ற வழக்கமாக எல்லோருக்கும் எழும் ஐயம் எனக்கும் எழுந்தது. முதல் அரையாண்டு சுவாரஸ்யம் மிக இல்லாத, ஏமாற்றமளித்த காலக்கட்டம்.

   இரண்டாமாண்டின் பிற்பகுதி கொஞ்சமாவது சுரத்தையோடு இருந்ததுக்கு NSSஉம் German Class உம் ஒரு காரணம். வகுப்பு மக்களுடனும் நன்கு பழக முடிந்தது; Beach போனது, IV போனதென்று ஒருவாறு பழக்கம் எங்களுக்குள் இருந்தது. German Class இல் பார்த்துப் பழகிய ஹரி பாரதியின் நட்பு மாதவம் வாயிலாக இன்றும் தொடர்கிறது.

    சில விஷயங்களை நிரந்தரமாக்கியது இரண்டாமாண்டு. அதுவே ஏதும் சாஸ்வதம் இல்லை என்பதையும் சொல்லித் தந்தது. குழப்பமான மனநிலையே சரியான முடிவெடுக்க வல்லதென்பதைக் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை மீதிருந்த பயம் அகன்றது. எல்லாருமே இந்த பரந்த உலகில் தனி மனிதர் தானே! நம் பசிக்கு நாம் தானே உண்ண வேண்டும்- இது தான் தனிமை!
     முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கிணங்க விடுதி அறைப் பிரச்னைக்குப் பின்னர், NSS, German Class எல்லாம் இருந்தும், முதலாமாண்டு போல் நண்பர்களோடு மகிழ்ச்சியாய் என்னால் இருக்கமுடியவில்லை. இது என் கல்லூரி வாழ்வின் ஆகப் பெரிய regret!
                                                                                                  (நினைவலை அடிக்கும்...)

   

 








Comments

  1. இதுக்கு தான் காலா காலத்துல commit ஆகணும்னு சொல்றது.. பதிவு அருமை...

    ReplyDelete

Post a Comment