சின்னஞ்சிறு ஆசைகள்-1

(என் சுவாசக் காற்றே படத்தில் வரும் திறக்காதக் காட்டுக்குள்ளே ' பாடல் கேட்டபின் என்னில் தன்னிச்சையாய் தோன்றியது!)



காட்டில் நதியில்
காலைப் பனியில்
திரியும் பறவையின்
முதுகில் ஏறி
பயணம் போவோம் வருவாயா?

சீறும் பாம்பின்
பிளவு நாக்கில்
சுவை அரும்புகள் ஆவோமா?






உணவின் நடுவே 
இடதும் வலதும் 
திரும்பிப் பார்க்கும்
அணில் அண்ணன்...
மாறி மாறி பார்க்கும் போது
நம்மை கண்டு ஓடிடுமோ?
அதன் முதுகின்
மூன்று கோடாய் மாறிடமாட்டோமா?

குப்பையில் -இலையில்
வெற்றுப் பேப்பரில்
என்ன இருக்குது
குருவிக்கு?
அதன் குழுவில் ஒன்றாய் நாமும் சேர்ந்து
குப்பை கிளறலாம் வாராயோ?

ஈயில் இருக்குது
மைக்ரோ கண்கள்- அதில்
ஆயிரம் காட்சிப் படலங்கள்
அதன் காணொளி எடுத்து
பிரித்துப்  படித்து
காமிரா செய்திட வேண்டாமா?


தெளிவுறப் பேசும்
செல்லக் கிளியே
மிளகாய் எங்கனம் தின்கிறதோ?
அதன் வாயை வாடகை
எடுத்து மிளகாய்
சுவைத்துப் பார்ப்போம் வாராயோ?

புல்வெளி மேயும்
மாடுகள் முதுகில்
உண்ணிக்கொக்காய்
சிறு மைனாவாய்
பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
பகலை முழுதும் கழிப்போமா?



பழங்கள் பலவகை
மென்று தின்று
எச்சம் போடும் பறவைகளே..
அதன் மிச்சம் தான்
இக்காடு என்பதை
உம் வாழ்வில் நீர் அறியீரோ?

மூங்கில் மரத்தின்
இலையோடு
காற்றுப் பேசும் இசையைக்
கேளா மனிதன் தான்
அதன் தண்டைத் துளைத்து
ஊதும் ஒசையை
சங்கீதம்  எனத் திளைக்கின்றான்!


நானே உலகம்
நானே உயிர்கள் எனப்
பீற்றிக் கொள்ளும் மானிடனே
உலகம் அறிந்த உண்மை ஒன்றை
உன் அகந்தையினால் நீ மறக்கின்றாய்!
நீ இன்றி இவ்வுலகம் வாழும்
உலகின்றி நீ எங்கிருப்பாய்?




Comments