#nostalgic note 1 - சில புரிதல்கள்

   புதிதாகக் கல்லூரியில்  காலடி எடுத்து வைத்த கணத்தில்மகிழ்ச்சிப் பெருமிதம் ஒரு பக்கம் இருந்தாலும் , தனியாக எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் இருக்கத் தான் செய்தது. எங்கே பார்த்தாலும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள், ஆடம்பரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் விலையுயர்ந்த ஆடைகளும் ஷூக்களும் அணிந்து வரும் ஆண் பெண்கள்; நிற்கவும், அண்டையில் செல்பவரைப்  பார்க்கவும்கூட நேரம் இல்லாது அங்குமிங்கும் செல்லும் கூட்டத்தை நான் அதுவரை கண்டதில்லை. 

    எனக்கும் ஆங்கிலம் தெரியும் தான் என்றாலும் இவர்கள் பேச்சைக் கேட்டால் இவர்களது சிந்தனையே ஆங்கிலத்தில் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது!விலையுயர்ந்தது இல்லையென்றாலும் எளிய அழகான ஆடைகளையும் காலணிகளையும் பெற்றோர் வாயிலாக நான் கொண்டிருந்தேன்.எனக்கும் வகுப்புகள் இருந்தன; எனினும் எனக்கு நன்கு வேடிக்கைப் பார்க்கவும் நின்று யோசிக்கவும் நேரம் இருந்தது.



   அரசியலா, திரைப்படமா, விளையாட்டா, இன்னும் என்னென்ன துறைகள்  இருக்கிறதோ அனைத்தைப் பற்றியும் பேச மட்டுமின்றி, அறிவுரைகள் கூறுமளவிற்கு விஷய ஞானம் உள்ளவர்களாய் இருந்தனர் சென்னை மாணவர்கள். தினமும் மாநகரப் பேருந்தில் பல மைல்கள் பயணித்து வரும் அவர்கள் பயணங்களின் ஊடே பலருடன் பேசிப் பழகுகின்றனர், பல இடங்களைப் பார்க்கின்றனர்,பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே  அவர்களுக்குத் தெரியாதது என்று ஒன்றுமே கிடையாதோ என்னவோ என்று எண்ணத் தோன்றியது! அவர்களில் பலர் தங்களது அடுத்த ஐந்து வருட வாழ்க்கையைத் தெளிவாக திட்டமிட்டவர்களாய் இருந்தனர். நான் research செய்யணும்; நான் இந்த companyயில் place  ஆகணும் ; என்றோ, ஏதாவதொரு திட்டத்தைக் கைவசம் கொண்டிருந்தனர். நானோ இன்றுக்கும் நேற்றுக்கும் உள்ள வித்தியாசம் கண்டு ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருந்தேன்; நானாவது திட்டமிடுவதாவது...

    அவர்கள் பேசும் பொருளினைப் பற்றி தெரியவில்லை என்றால் உரையாடல்களில்  இருந்து நம்மை அசால்டாக கழட்டி விடும் பழக்கம் அவர்களுக்கு இயல்பாகவே உரியது. இப்படி புதிதாக வந்த இடத்தில்தான் எத்தனை மொக்கைகள் வாங்க வேண்டி வருமோ என்றெண்ணி வருந்திக் கொண்டிருந்தபோதே இறைவன் அவர்களது முகமூடியைக் கழற்ற சில வாய்ப்புகளை அள்ளி வழங்கினான்.

   நான் முதன்முதலில் கல்லூரியில் கண்ட என் வகுப்புத் தோழனுக்குத் தமிழிலே பேச வராது! இத்தனைக்கும் அவன் தமிழன்; ஆங்கிலப் பள்ளியில் கற்றதால் பேச்சு  இயல்பாகவே ஆங்கிலம் தான் என்பான். தமிழ் புரியும் என்றாலும் தவறாகப் பேசினால் கலாய்ப்பரோ என்ற பயம்! மேலும் எனக்கு தமிழோடு தெலுங்கும் தெரியும் என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டுப் போனான்.

      என் NSS நண்பன் ஒருவன்- அம்பத்தூர்க்காரன்- அவன் இன்று வரை சோளம் வேக வைத்து சாப்பிட்டதில்லை! 'Sweet corn சாப்பிட்டு இருக்கேன். ஆனா சோளம் வேகவச்சு சாப்பிட்டதில்லை' என்று அவன் சொன்னது கேட்டு மலைத்துப் போனேன்!

     சென்னையில் இருந்து கொண்டு தாம்பரம் என்னும் படி தாண்டாப் பேர்வழிகளும் உண்டு. கிரிக்கெட், அரசியல், என்று மணிக்கணக்காய் வம்பளப்பவர்கள் பலர் ஏரிக்கரை கண்டதில்லை; ஆழ்துளைக் கிணறு பார்த்த இவர்களில் பலர் பிரம்மாண்ட வட்டக் கிணறுகளைக் கண்டதில்லை. கறந்த பால் சூடு போகாமல் அருந்தியதில்லை; சீம்பாலும் உண்டதில்லை! அவ்வளவு ஏன்? மயிலாப்பூர் கபாலியைக் காணாமல் பள்ளி வாழ்க்கை கழித்த பலர் இருந்தனர்.

  இவ்வாறு சில நிகழ்வுகளால், சென்னை மாணவர்கள் என்றால் கெத்து, நாமெல்லாம் எங்கே அவர்களுக்கு ஈடு கொடுக்கப் போகிறோம் என்று எண்ணியிருந்த மாயை அகன்றது. அவர்களுக்கே உரிய  அனுகூலங்களும் இருந்தது மறுப்பதற்கு அப்பாற்பட்டதுதான். அதே வேளையில், என்னைப் போன்ற சென்னை அல்லாத பிற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்தவருக்கும் எங்களுக்கே உரிய சில அனுகூலங்கள் இருக்கிறது என்றுணர்ந்தேன்!

   NSS உம்  Engineering Maths-1உம் என்று முதல் அரை ஆண்டும், Circuit theory யும் Engineering Maths-II வும் ஆக இரண்டாவது அரைஆண்டும் வெற்றிகரமாய் முடிந்தது. இதற்குள்ளாகவே சில புரிதல்கள் உண்டாகின-

  • கல்லூரி பள்ளி போலன்று. படிக்கச் சொல்ல மாட்டார்கள். பிடித்தால் படி- பிடிக்கலையா கட் அடி என்பதுவே கல்லூரி நியமம்.
  • ஆசிரியர்கள் பாடம் எடுப்பது உனக்கல்ல மட நெஞ்சே! வகுப்பில் உள்ள நான்கு நல்லாப் படிக்கும் மாணவர்களுக்கு. தேர்வுக்கு முன்பு படித்தாலே பாஸ் ஆகலாமே!
  • கல்லூரி விழாக்களில் பல ஆடம்பரத்தின் வடிகால்கள்; அவையனைத்தும் போலிகள்; பொய்ப் பாராட்டு, போலி கைகுலுக்கல்கள், காசு குடுத்து வாங்கும் கௌரவங்கள்!
   இப்படியாக முதலாண்டு முற்றி அந்த விடுமுறையில் NSS Camp ஆக புழல் அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டை சென்றேன்! சுபம்...இரண்டாம் ஆண்டு ' வாடா மகனே வா' என sarcastic ஆக சிரித்து என்னை வரவேற்றதில் இருந்த இரக்கமற்ற கிண்டல் பேச்சு  எனக்கு அப்போது புரியவில்லை!
                                                                                                      ....(நினைவலை அடிக்கும்)

Comments

  1. En Kalluri nigazhvugalai niyabagapaduthugiradhu indha katturai😃 Vazhthukkal thambi!

    ReplyDelete
  2. That word NSS in the blog ❤❤ Nalla irunchu daaaaw !

    ReplyDelete
  3. Good expecting ur second year experience

    ReplyDelete
  4. 12 வருட தொடர் ஓட்டத்தின் முடிவில், நின்று கவனிக்க இடமளித்த கல்லூரி முதலாம் ஆண்டு...

    ReplyDelete
  5. 12 வருட தொடர் ஓட்டத்தின் முடிவில், நின்று கவனிக்க இடமளித்த கல்லூரி முதலாம் ஆண்டு...

    ReplyDelete
  6. நன்று...நினைவுகளில் அசை போடலாம் வா

    ReplyDelete

Post a Comment