வளரும் நாய்க்குட்டி

அது ஒரு அநாதை நாய்க்குட்டி
சின்னஞ்சிறு காதுகளும்
இன்னும் முளைக்காத
முன்பற்களும்
நகம் இல்லாத
பாதங்களுமாய்
குட்டி-மிருதுவான வாலுமாய்
அது ஒரு அழகான
அநாதை நாய்க்குட்டி

மடி பிடித்து
பால் பருக முயன்றாலும்
தடுத்து விரட்டாதவளே
அதன் தாய்!
அந்தத் தாயின்  கணவனே
அதன் அன்றைய தந்தை!

பெண்களுமாய்
ஆண்களுமாய்
சகோதரம் ஏராளம்

வாலாட்டி வாலாட்டி  பின்தொடர்ந்து
ஓடி விரட்டிப் பழகி
பல் முளைத்த பின்னர்
குரைக்கத் தொடங்கும்
அந்த நாய்க்குட்டி

வெயிலுக்கு
வானம்தான்  கூரை..
மழைக்கு
கூரைக்கோ பஞ்சமில்லை
அன்றொரு தாய் நாய்
ஈன்றபின்  மூட மறந்த
மணல் பொந்து,
தெரு முனை
பெட்டிக் கடை வாசல்,
காசில்லாத ATMஇல்
உள்ளே காவலரும்
வெளியே அவர் இருக்கையில்
உடல் குறுகி
அந்த நாயும்…


அநாதை நாய்க்குட்டி
நாள்தோறும் வளர்கிறது
வளர வளர
அறியாத குட்டிக்கும்
பாலூட்டும் மனிதத்தை
நாய் எனும் மிருகமிடத்தும்

வம்புக்கே வராது
குப்பை பொறுக்கும்
நாய்க்கு குறிவைக்கும்
மிருகத்தை
மனிதனிடத்தும்
கற்றுத் தெளிந்து வளர்கிறது!

அந்த அநாதை நாயும்
ஒரு நாள் தாயாகும்/தந்தையாகும்
மரங்களில்
கார் டயர்களில்
மின் விளக்கு கம்பத்தடியில்
அபிமான தலைவர் சிலையில்
சிறுநீர் எல்லை கிழிக்கும்!
அதிகாலை பஸ்ஸில்
சொந்த ஊர் திரும்புகையில்
நம்மைப் பார்த்து குரைப்பது

அந்த வளர்ந்த  நாயாகவும் இருக்கலாம்!

Comments

  1. ஜெயகாந்தனின் ஹென்றி எழுதியதை படித்த உணர்வு...

    ReplyDelete
  2. ஹரி அண்ணா சொன்னதே தான். ஆனா, உங்களுக்கு நாய் பிடிக்காதே?

    ReplyDelete

Post a Comment