அப்பா சொன்ன நரிக்கதை!

கதையான கதையாக்கும் இது. சிறுவயதில் என்னை சாப்பிடச் செய்யவும், போரடிக்கும் போது நான் அழுவேன்- அதை நிறுத்தவும், என்னை சிரிக்கச் செய்யவும் அப்பா பலமுறை சொன்ன கதை இது. பின்னாட்களில் என் தங்கைக்கும் அப்பா சொல்லக் கேட்ட இந்த கதைதான் நான் நினைவறிந்து கேட்டதாக நான் எண்ணும் முதல் கதை. இன்னும் அப்பா கூறிக்கொண்டிருக்க இதை நான் கேட்பதாக கனவுகள் கண்டு மகிழ்வேன். அவர் கூறும் சுவாரஸ்யத்தில் பத்தில் ஒரு பங்கையேனும் நான் வாசகருக்குக் கடத்தினால் மகிழ்ச்சியே. இனி கதை....





    ஒரு காட்டுல ஒரு நரிக் குடும்பம் இருந்துச்சாம். அப்பா நரி- ரெண்டு குட்டி நரிங்க. மூணும் காட்டுக்கு ஓரமா இருந்த ஒரு குகைல வாழ்ந்து வந்துச்சு. ஒரு நாள் அப்பா நரி வேட்டைக்கு வெளில கெளம்பிச்சு. நல்ல பசியோட நாக்குல எச்சியூர பசங்க ரெண்டும் குகைல காத்திருந்துசுங்க.
  
   வேட்டைக்குப் போன அப்பா நரி செம்மையா ஒரு முயல புடுச்சுது. காதுங்க ரெண்டையும் பாக்க பாக்க  அப்பா நரிக்கு மசால் போட்டு பக்கோடா சாப்பிடணும்னு ஒரு ஐடியா வந்துச்சு. அந்து முயல குகைக்கு தூக்கிட்டு வர வழிலேயே எப்படியெல்லாம் சமைக்கலாம்னு மனசுல கணக்கு பண்ணிட்டே குஷியா வந்துச்சு அப்பா நரி. 

   "பசங்களா உங்களுக்கு சாப்பிட என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க" னு சொல்லிக் கூப்பிட்டாரு.

  ஓடி வந்து பாத்த நரிங்க ரெண்டுக்கும் சந்தோசம் தாங்கல. நல்ல பசிக்கு செம்ம முயலா மாட்டிருக்குடானு ஒண்ணுக்கொண்ணு பாத்து சிரிச்சுக்கிச்சாம். 

  "பசங்களா நான் சந்தைக்கு போயி மசால் வாங்கிட்டு வரேன். அதுவரைக்கும் முயல பத்திரமா பாத்துகோங்க" னு சொல்லிட்டு அப்பா நரி மசால் வாங்க சந்தை பக்கம் போனது.

   வெளியே இறங்கிப் போயிட்டு இருந்த அப்பா நரிக்கு மனசுல லேசா ஒரு சந்தேகம். 'பசங்க சுட்டிப் பயலுக, அவசரத்துல முயல சாப்பிடுருவானுங்களோ' அப்படிங்கற பயம்தான் அது.  அப்பா நரி இப்படி யோசிச்சுட்டு போய்ட்டுருக்கும் போதே எதிர்ல அவரோட பழைய கூட்டாளி கரடியண்ணன்  விசிலடிச்சுகிட்டே ஒய்யாரமா நடந்து வந்தாரு.
  
 " அண்ணே வணக்கம்ணே"- வணக்கம் வச்சாரு அப்பா நரி.

 " சொல்றா நரிப் பயலே, என்ன இந்த பக்கம்"- கரடியண்ணன் கேட்டாரு.

 " அது ஒண்ணுமில்லண்ணே, ஒரு முயலப் புடிச்சேன். அத சமைக்க மசால் வங்கப் போறேண்ணே"

 " அடடே நல்லதுடா நரிப்பயலே"

 " ஒரு ஒத்தாச பண்ணணும்ணா நீங்க"

 "சொல்லுடா நரிப்பயலே, என்னடா பண்ணணும்?"

 "என் பசங்க ரெண்டும் சுட்டிப்பயலுக, அவங்க அந்த முயலத் திங்காம பாத்துக்கோங்க, நான் மசால் வாங்கிகிட்டு இப்பமே வந்திர்றேன்"னு சொல்லிச்சு அப்பா நரி.

 "சரிதாண்டா.. நான் உன் குகைக்கு போறேன் சீக்கிரமா வா" னு சொல்லிட்டு மறுபடியும் விசில் அடிச்சுகிட்டே போச்சு அந்த கரடி.

 இப்ப தான் அப்பா நரிக்கு மனசுல ஒரு திருப்தி உண்டாச்சு. இனி நிம்மதியா போய் நல்ல மசாலா பாத்து வாங்கிட்டு வரலாம்னு விருட்டு விருட்டு னு நடைக் கட்டிச்சு அப்பா நரி.

 அதே நேரம் குகைல ரெண்டு நரிங்களுக்கும் இருப்பே கொள்ளல. முயலோட அந்த அழகான காது ரெண்டையும் பாத்து பாத்து எச்சிலூறிச்சு ரெண்டுக்கும். எடயில இன்னொருத்தன் எங்கயாச்சும் வாய வச்சுருவானோனு எச்சரிக்கையா நோட்டம்வுட்டுகிட்டே இருந்துச்சுங்க. அப்ப தான் நம்ம கரடியண்ணன் அங்க வந்து சேந்தாரு.

  "யே குட்டி நரிங்களா..." னு குகை வாசல்ல இருந்து குரல் குடுத்தாரு கரடியண்ணன்.

 'ஆகா இவரு எதுக்கு இங்க வந்தாருன்னு' சந்தேகத்தோட குகைவாசலுக்கு வந்துச்சுங்க ரெண்டு சுட்டி நரியும்.

 " நீங்க அந்த முயல எதுவும் பண்ணாம பாத்துக்க உங்க அப்பா அனுப்பிச்சார்டா என்னைய.. யாராச்சு அந்த முயலத் தொட்டீங்க அவ்ளோதான் பாத்துகோங்க" னு சொல்லி கண்ணுக ரெண்டையும் உருட்டி மெரட்டினாரு கரடியண்ணன்.

  மனசுக்குள்ள நல்லா கலங்கிப் போச்சுது ரெண்டுக்கும். போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சேன்னு நெனச்சு வருந்திச்சு. இந்த நேரம் பாத்து கரடியண்ணன் வேற விசில் அடிக்க ரெண்டுக்கும் ஏகத்துக்கும் எரிச்சல் ஆச்சுது. 

  அப்பவும் ரெண்டு நரிங்களும் அந்த முயலையே பாத்துட்டு இருந்துச்சு. எப்படியும் இத சாப்பிட்டுரணும். முடியலனா அதோட காதயாச்சும் சாப்பிடணும்னு கணக்கு போட்டுச்சுங்க ரெண்டும். திடீர்னு அண்ணன் நரிக்கு ஒரு ஐடியா வந்துச்சு. கமுக்கமா தம்பியப் பாத்து கண்ணடிச்ச அண்ணன் நரி, முயலோட ஒரு காத நல்லா கடிச்சு சாப்ட்டுருச்சு. தம்பி இன்னொரு காத பிச்சு சப்புக்கொட்டி சாப்டுச்சு. ரெண்டுக்கும் ஏக சந்தோசம். ஆனா கரடியண்ணன் காட்டிக் குடுத்துருவாறேனு தம்பி நரி பயந்துச்சு. அண்ணன் நரி அத புரிஞ்சுகிட்டு கண்ணாலேயே பயப்படாதேனு தைரியம் சொல்லிச்சு.

  அப்புறம் மெதுவா- " கரடியண்ணே கரடியண்ணே "னு வெளில பொய் கரடியக் கூப்டுச்சு அண்ணன் நரி.

  "என்னடா சுட்டிப்பயலே"

  "அண்ணே உங்களுக்கு இத எப்படி சொல்றதுன்னே தெரியலைண்ணே" னு சொல்லிக் கைய பெசஞ்சு சோகமா மூஞ்சிய வச்சுகிச்சு அண்ணன் நரி.

  " என்னடா ஆச்சு உனக்கு, சொல்றா" னு கரடியும் மெரட்டிச்சு.

  உள்ளூர பயமானாலும் வெளிக்காட்டாம அண்ணன் நரி சொல்லிச்சாம்-" அண்ணே நீங்க மோசம் போய்டீங்கண்ணே"

  " என்னடா ஒளர்ற ?"

  " விஷயம் தெரியாதாண்ணே உங்களுக்கு? எங்க அப்பாக்கு ஒரே வயித்து வலி"

 "அதுக்கு ஏண்டா நான் மோசம் போகணும்?"

  " முழுசாக் கேளுங்கண்ணே.. ரெண்டு மாசமா எங்க அப்பாக்கு தீராத வயித்து வலிண்ணே. என்னென்னவோ மருந்து சாப்பிட்டும் குணமே ஆகல. அப்போ நம்ம காட்டுவைத்தியர் பாம்பண்ணன் தான் கரடிக் காத மசால் போட்டு அரச்சு சாப்டா சரியாப் போயிரும்னு சொன்னாரு. அதுக்கு தான் அப்பா உங்கள இங்க உக்கார வச்சுட்டு போயிருக்காருண்ணே"

 திடுக்கிட்டது கரடியண்ணன். 'அப்படியாடா என்பது போல் தம்பி நரியைப் பார்க்க அதுவும் ஆமாம் என்பது போல் தலையாட்டியது. காதை தடவிப் பார்த்துக்கொண்ட கரடியண்ணன் நைசாக  எஸ்கேப் ஆனது.

  மசால் வாங்கி வந்த அப்பா நரி குகையில் கரடியண்ணனைக் காணாது " எங்கப் போய்ட்டாரு கரடியண்ணன்?" னு விசாரிச்சாரு.

  " அதுவா பா, நாங்க எவ்வளோ சொல்லியும் கேக்காம முயலோட ரெண்டு காதையும் பிச்சிகிட்டு ஒடராருப்பா அவரு" ன்னுச்சு அண்ணன் நரி.

  அப்பா நரிக்கா, ஒரே அழுகையாவும் சோகமாவும் இருந்துச்சு. ஆச ஆசையா வாங்கிட்டு வந்த மசாலவப் போட்டு முயலக் காத சமைக்கலாம்னு பாத்தா இப்படி பண்ணிட்டாரே கரடியண்ணன்னு நெனச்சு வருந்திச்சு.

  எந்திரிச்சு கரடியண்ணன் போன வழிலேயே அவரத் தேடி ஓடிச்சு அப்பா நரி. தூரமா போயிட்டு இருந்த கரடியப் பாத்து அப்பா நரி 
" அண்ணே காதக் குடுத்துருண்ணே" னு கெஞ்சிச்சு

  நம்ம காதத் தான் கேக்குரான்னு எண்ணி கரடியண்ணன் "முடியாதுடா போடா.." னு சொல்லிகிட்டே ஓட்டம் பிடிச்சுது.

  "அண்ணே ஒன் ஒரு காதயாச்சுக் குடுண்ணே" னு கெஞ்சிட்டு பின்னாலேயே ஓடிச்சு அப்பா நரி.

   "அண்ணே ஒரேஒரு காதுண்ணே.. ஒரு காதுண்ணே.. அண்ணே...."னு கத்திகிட்டே ஓடுச்சாம் அப்பா நரி.

  தன் காது ரெண்டையும் கெட்டியாப் புடிச்சுகிட்டே பின்னங்கால் பிடறிபட ஓடிச்சு கரடியண்ணன். இந்த வேடிக்கைய எல்லாம் பாத்து செம்மயா சிரிச்சிகிச்சாம் நரிங்க ரெண்டும்.


       ....இப்படியாக கதை முடிந்ததும் நான் கண்களில் நீர் வழிய சிரித்துக் கொண்டே தூங்கிப் போவேன்! 


         

Comments

  1. ஹஹஹஹ
    நினைவுகளில் உன்னோடு நான்....

    ReplyDelete

Post a Comment